இளையராஜாவின் இசையைக் கேட்டு படம் வரையப் போகும் 50 ஓவியர்கள்!

1000 படங்களுக்கு இசையமைத்து சாதனைப் படைத்த இளையராஜாவைக் கொண்டாடும் வகையில் அவரது இசைக்கு ஓவியங்களை வரையவிருக்கின்றனர் 50 முன்னணி ஓவியர்கள்.

இதுகுறித்து நடிகர் சங்க தலைவர் நாசர், இயக்குநர் ஜனநாதன் ஆகியோர் சென்னையில் இதுகுறித்துக் கூறியதாவது:

“இசையமைப்பாளர் இளையராஜா தமிழ் சமுதாயத்துக்குக் கிடைத்த பொக்கிஷம். இதுவரை 1000 படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். இது பெரிய சாதனை ஆகும்.

இதனை பாராட்டும் விதமாக சினிமாவைச் சாராத அவரது இசை ஆல்பங்களை ஓவியமாக தீட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு புதிய முயற்சி ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இசையை சிற்பமாகவும், ஓவியமாகவும் படைத்துள்ளனர். அதன்பிறகு விட்டுப்போன அந்த சரித்திரத்தின் நீட்சியாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

இளையராஜாவின் இசையை ஓவியமாக மாற்றும் நிகழ்ச்சி வருகிற 31-ந்தேதி பெசன்ட் நகரில் ஓவியர் சந்துரு தலைமையில் நடைபெறும்.

இதில் 50 பிரபல ஓவியர்கள் கலந்து கொண்டு இசையைக் கேட்டபடி ஓவியம் வரைகிறார்கள். பின்னர் அந்த ஓவியங்கள் லலித் கலா அகடமியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்,” என்றனர்.

Related Posts