எதிர்வரும் ஜூன் மாதமளவில் இளைஞர் மாநாடு ஒன்றினை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக தமிழ் மக்கள் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘தமிழர் தாயகத்தின் முன்னேற்றத்தகும் அபிவிருத்தியில் இளைஞர் யுவதிகளின் பங்குபற்றுதலை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்படுகின்றது.
தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டுக் குழுவினால் இதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள குழுவில் சின்மய மிஷன் சுவாமிகள், அருட்தந்தை ரவிச்சந்திரன் அடிகளார், ஓய்வுநிலை அதிபர் திரு அருந்தவபாலன், திருமதி அனந்தி சசிதரன், கலாநிதி சரவணபவன், திரு சிவரூபன் மற்றும் திரு கேசவன் ஆகியோர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாநாட்டுக்கான ஆரம்பக் கலந்துரையாடல் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் லக்ஷ்மன் தலைமையில் கடந்த 17.04.2018 அன்று நடைபெற்றது.
இதன்போது பிரதேச ரீதியாக இளைஞர், யுவதிகளை பங்குபற்றச்செய்வதற்கு மேற்கொள்ளக்கூடிய அனைத்து வழிவகைகளும் ஆராயப்பட்டன. வடமாகாணத்தில் இருக்கக்கூடிய அனைத்து இளைஞர் மற்றும் யுவதிகள் சார் கழகங்கள் அமைப்புக்கள் போன்றவற்றுடன் இணைந்து இந்த மாநாடு நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போருக்குப் பின்னரான எமது சமுதாயத்தில் இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், சவால்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தியில் அவர்களது அர்ப்பணிப்புடனான பங்களிப்பினை கண்டறிவதும் அடையாளப்படுத்துவதும் இந்த மாநாட்டின் முதன்மை நோக்கமாகும்’ எனக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.