நல்லாட்சி அரசாங்கம் ஸ்ரீலங்காவை சர்வதேச போர்த் தலமாக மாற்றிக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி, மீண்டும் ஆயுதங்களைக் கையில் ஏந்தும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றது.
நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்ற புதிய அரசியலமைப்பை அவசர அவசரமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி கூறியுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்றய தினம் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அங்கு உரையாற்றிய கெஹலிய ரம்புக்வெல “2020ஆம் ஆண்டளவில் இந்த நாடு எலும்புத்துண்டாகவே மாறிவிடும். ஸ்ரீலங்கா சர்வதேச போர்த் தலமாக மாறிவிடும். ஒருபுறத்தில் பலாலியும், சம்பூர் பகுதியும் இந்தியாவிற்கும். மறுபுறத்தில் திருகோணமலை அமெரிக்காவிற்கும் வழங்கப்படுகிறது.
முன்னைய ஆட்சியின்போது தேர்தல் காலங்களில் இந்த அரசாங்கத்திற்கு மேலும் 5 ஆண்டுகளைக் கொடுத்தால் சீனாவின் கொலனியாக ஸ்ரீலங்காவை மாற்றிவிடுவார்கள் என்று குறிப்பிட்டார்கள். இன்று சீனாவின் கொலனியாவ இந்த நாட்டை மாற்றியமைப்பது யார்? இங்கு சீனாவின் கொலனியும், அங்கு அமெரிக்காவின் கொலனியும், மற்றைய இடத்தில் இந்தியாவின் கொலனியாகவும் மாற்றி இந்த நாட்டை விளையாட்டுத் திடலாக மாற்றி இளைஞர்களை மீண்டும் ஆயுதமேந்தும் நிலைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது நல்லாட்சி அரசாங்கம்.
விசேடமாக புதிய அரசியலமைப்பு தொடர்பில் புதுமையான அவசரம் நிலவிவருகிறது. 9,10,11ஆம் திகதிகளில் அறிக்கைகளை சமர்பித்து பேசவிருக்கின்றனர். ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி புதிய அரசியலமைப்பை நிறைவுசெய்து நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்ற எதிர்பார்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. தமது பகுதிகளிலுள்ள பிரதிநிதிகளை சந்தித்து இந்த கேடுநிறைந்த அரசியலமைப்பிற்கு ஆதரவாக கை உயர்த்த வேண்டாம். அவ்வாறு உயர்த்தினால் பிரதேசங்களுக்கு வர இடமளிக்க மாட்டோம் என்பதை இந்த நாட்டு மக்கள் கூற வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கின்றோம்” -என்றார்.
இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் அதிகாரங்களை அபகரித்து பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல குற்றம் சுமத்தினார்.
அதேபோல ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் பணிபகிஸ்கரிப்பு இடம்பெற்ற பகுதியில் பிரவேசித்த கடற்படைத் தளபதி, ஊடகவியலாளர் ஒருவர் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல கருத்து வெளியிட்டார்.
“ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற சம்பவத்திற்கு கடற்படைத் தளபதிக்கு உத்தரவிட்டது யார்? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சராக உள்ளார். அவர் இதுபற்றி ஒருவார்த்தையும் கூறவில்லை. இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சரின் பணிகள் வேறு யாருக்காவது ஒப்படைக்கப்பட்டுள்ளதா? அல்லது யாராவது வலுக்கட்டாயமாக பயன்படுத்துகின்றார்களா? ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமர் ரணில் விக்கிரசிங்க அப்பட்டமாக அத்துமீறி எடுத்துப் பயன்படுத்துகின்றமை அவரது நடவடிக்கைகள் தெளிவாக விளங்குகின்றது. பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு அமைச்சுப் பதவி என்ற இறைச்சித் துண்டுக்காக குறைக்கின்ற அளவைப் பார்க்கும்போது நான் தேசிய பாதுகாப்பு ஊடகப் பேச்சாளராக கடமையாற்றியுள்ளேன். எனவே சரத் பொன்சேகா யுத்த காலங்களில் தனது கடமையை சரிவரப் பயன்படுத்தியுள்ளாரா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது” – என்றார்.