இளைஞர்கள் கடலில் மூழ்கி மாயம் : சோகத்தில் பெற்றோர் தற்கொலை

மட்டக்களப்பு – பாசிக்குடா கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ள நிலையில், சோகம் தாளாத பெற்றோர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் நாம் பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு கேட்டபோது, சண்முகம் சுரேஸ்குமார் (வயது 22) மற்றும் சண்முகம் சதீஸ்குமார் (வயது – 18) ஆகிய இளைஞர்கள் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற நிலையில் நேற்று மாலை முதல் காணாமல் போயுள்ளதாகவும் குறித்த இளைஞர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையென்றும் குறிப்பிட்டனர். அத்தோடு, தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், தமது பிள்ளைகளை இன்று காலை வரை காணாத பெற்றோர் இன்று காலை தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பட்டியடைச்சி பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சண்முகம் மற்றும் சண்முகம் யோகலக்ஷ்மி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts