பாடசாலைகளிலுள்ள பதிவு செய்யப்படாத அபிவிருத்திச் சங்கங்கள் யாவும் உடனடியாகப் பதிவு செய்யப்பட வேண்டும். பாடசாலைகளுக்கு கிடைக்கும் இலவச உதவிகள், அன்பளிப்புகள் எதுவாக இருந்தாலும் அதிகாரிகளின் அனுமதியின்றி அதிபர்கள் எவரும் அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது.இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆளுநர் ஜீ.ஏ. சந்திர சிறியின் உத்தரவுக்கமைய வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகள், சகல பாடசாலை அதிபர்கள், வட மாகாண பண்பட்டலுவல்கள் , மற்றும் விளையாட்டுத்துறைத் திணைக்களப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கு இந்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளார்.
வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரின் சிபார்சு இல்லாது பிற முகவர்களிடம் எதுவித முன்மொழிவுகளோ, வேண்டுகோள்களோ விடுக்கக்கூடாது. உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகள், தனிநபர்கள் குழுக்கள், நண்பர்கள் என்று எவருடனும் தொடர்பு கொண்டு செயற்படுத்தவோ, நேரடியாக அவர்களிடமிருந்து உதவிகள், அன்பளிப்புகள் பெறுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தொடர்பு கொண்டு உதவி பெறுவதாயின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப் படல் வேண்டும். கல்வித் திணைக்களங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளில் இயங்கும் பதிவு செய்யப்படாத அபிவிருத்திச் சங்கங்கள் யாவும் உடனடியாகப் பதிவு செய்யப்படல் வேண்டும். பதிவு செய்யப்படாத அபிவிருத்திச் சங்கங்கள் எவையும் எதிர் காலத்தில் செயற்படமுடியாது.
பாடசாலைகளுக்கான இலவச உதவிகள், உபகரணங்கள், தளபாடங்கள், பயிற்சிகள் என எதுவாக இருந்தாலும் அவை ஏற்றுக் கொள்ளப்படலாகாது.உதவி பெறுவதாக இருந்தால் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அல்லது வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரது அனுமதி பெறப்படல் வேண்டும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.