இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றம் -பொ.ஐங்கரநேசன்

என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த குழு தனது அறிக்கையில் நான் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவோ, இலஞ்சம் வாங்கியதாகவோ, ஊழல் புரிந்ததாகவோ எங்கும் குறிப்பிடவில்லை. இவையெவையும் நிரூபிக்கப்படவில்லை என்று தங்களது அறிக்கையில் தெரிவித்திருக்கும் விசாரணைக்குழு, கடைசியில் இதற்கு முரணான வகையில் என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அவர்களது தீர்ப்பின்படி நான் இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றமாக உள்ளது என்று முன்னாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமாகிய பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையில் அண்மையில் இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (09.07.2017) திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் பொ.ஐங்கரநேசனின் விளக்கம் அளிப்புக் கூட்டம் நடைபெற்றது. நல்லூர் பிரதேச சனசமூகநிலையங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றும்போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

விசாரணைக் குழுவினர் தங்கள் அறிக்கையில் உழவர் விழாக்களைக் களியாட்ட நிகழ்ச்சிகளாகக் குறிப்பிட்டிருப்பதோடு, இவ்விழாக்களை மாவட்டமட்ட நிகழ்ச்சிகளோடு மட்டுப்படுத்தாமல் மாகாண மட்டத்துக்கு விரிவுபடுத்தியது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிகழ்ச்சிகளை தேர்தல் கால வாக்குத் திரட்டல் என்றும் அமைச்சரின் பெருமையை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். உழவர் பெருவிழா முற்று முழுதாக சாதனை உழவர்களைக் கௌரவிக்கும் விழா. இதனைக் களியாட்ட விழாவாக அவர்கள் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய அரசாங்கம் தேசியமட்டத்தில் போட்டிகளை நடாத்தி விவசாயிகளைக் கௌரவிக்கும்போது, வடமாகாண அரசாங்கம் மாகாணமட்டத்தில் போட்டிகளை நடாத்தி எமது விவசாயிகளைக் கௌரவிப்பதில் தவறேதும் இல்லை. இந்தக் கௌரவம் விவசாயிகளை உற்சாகப்படுத்தி மேன்மேலும் சாதனைகளைப் புரிவற்குத் தூண்டுகின்ற ஒரு ஊக்கி.

நிகழ்ச்சிகளுக்குக் கூட்டம் சேர்வதை அமைச்சரின் தேர்தல் கால வாக்குத் திரட்டும் முயற்சி என்று கொச்சையாக இவர்கள் குறிப்பிட்டாலும், இதன் பின்னால் கூட்டத்தைக் கண்டு அஞ்சும் அதிகார வர்க்கத்தின் மனோ நிலையே மேலோங்கி இருக்கிறது. ஆளும்தரப்பும், அதிகார வர்க்கமும் மக்கள் கூட்டமாகத் திரளுவதை விரும்பாது. அனுமதிக்காது. இவ்வாறு சேரும் கூட்டம் எங்கே தங்கள் அதிகாரத்துக்கு எதிராக ஒருநாள் திரும்பிவிடுமோ என்ற அச்சம் ஆளும்தரப்புக்கு எப்போதும் இருக்கும். அவர்களின் மனோநிலையையே விசாரணைக்குழுவும் பிரதிபலித்திருப்பது வேதனைக்குரியது.

விசாரணைக்குழுவின் முன்னால் நான் தோன்றிவிட்டு பின்னர் அக்குழுவை குறைசொல்லலாமா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள், நான் இலஞ்சம் வாங்கினேன், நிதிமோசடியில் ஈடுபட்டேன் என்று குறிப்பிட்டுவிட்டு நான் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தால் அது பொய்யாக இருந்தாலும் இக்குழுவை நான் விமர்சித்திருக்க முடியாது. ஆனால், அவர்களே தங்களது அறிக்கையில் நான் நிதிமோசடியில் ஈடுபட்டதை நிரூபிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுவிட்டு, நான் பதவிவிலகவேண்டும் என்றும் கோரியிருப்பதுதான் அவர்களின் நீதிநியாயம் குறித்தும், மாகாண சபையில் குழப்பங்களை ஏற்படுத்தி முதலமைச்சரை பதவியிறக்கும் சதிமுயற்சிக்கு இவர்களும் துணைபோயுள்ளார்களோ எனவும் சந்தேகப்படவைத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

வேதபாரயண சனசமூக நிலையத்தின் தலைவர் இ.சத்தியானந்தனின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவநேசனும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

Related Posts