யாழ். நீதிவான் நீதிமன்றில் வைத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் 500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற சந்தேகத்தில் கைதான பொலிஸ் உத்தியோகத்தரை இன்று புதன்கிழமை (06) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முற்படுத்துமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு திங்கட்கிழமை (04) உத்தரவிட்டார்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் தண்டப்பணம் செலுத்திவிட்டு சாரதி அனுமதிபத்திரத்தைப் பெற்றுக்கொள்ள கடந்த வெள்ளிக்கிழமை (01) நீதிமன்றம் சென்ற முச்சக்கரவண்டி சாரதியொருவரிடம் இருந்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த, நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தரான மேற்படி நபர் 500 ரூபாயை இலஞ்சமாக பெற்றுள்ளார்.
இலஞ்சப் பணம் கொடுக்கும் போது, பணத்தின் இலக்கத்தை குறித்தெடுத்து வைத்திருந்த முச்சக்கரவண்டி சாரதி, இலஞ்சத்தைக் கொடுத்துவிட்டு, குறித்த பொலிஸார் இலஞ்சம் வாங்கியதாக நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இதற்கு முன்னரும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சம் வாங்குவதாக அறிந்திருந்த நீதவான், அவரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டு, அவரை விளக்கமறியலில் வைத்திருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லையெனவும் இது இலஞ்சம் மற்றும் ஊழலுடன் தொடர்புள்ள விடயம் என்பதால் பொலிஸ் உத்தியோகத்தரை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்தார்.