இலங்கை 30 வருடங்களின் பின் சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்றி சாதனை!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதல் தடவையாக 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற இலங்கை, 30 வருடங்களின் பின்னர் தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுடனான தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது.

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (21) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஒரு போட்டி மீதமிருக்க 3 – 1 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

கடந்த 12 வருடங்களில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் தடவையாக இலங்கை வெற்றிபெற்றுள்ளது.

இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு மைக்கல் க்ளார்க் தலைமையிலான அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2 – 1 என்ற ஆட்டக் கணக்கில் குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை வெற்றிகொண்டிருந்தது.

அத்துடன் கடந்த 30 வருடங்களில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை தனது சொந்த மண்ணில் வெற்றிபெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் 1992 இல் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் அலன் போர்டர் தலைமையிலான அவுஸ்திரேலியாவை 2 – 1 என்ற ஆட்டக் கணக்கில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை வெற்றிகொண்டிருந்தது.

நேற்று நடைபெற்ற போட்டியில் சரித் அசலன்க குவித்த அபார சதம், தனஞ்சய டி சில்வாவின் சகலதுறை ஆட்டம், சிறப்பான பந்துவீச்சு என்பன இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 259 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 254 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

மஹீஷ் தீக்ஷனவும் சாமிக்க கருணாரட்னவும் முறையே 2 ஆம், 3ஆம் ஓவர்களில் ஓட்டம் எதனையும் கொடுக்காததுடன் கருணாரட்ன தனது ஓவரில் ஆரொன் பின்ச்சை (0) ஆட்டமிழக்கச் செய்தார்.

எவ்வாறாயினும் மிச்செல் மார்ஷுடன் 2 ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களையும் மானுஸ் லபுஸ்சானுடன் 3 ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களையும் அலெக்ஸ் கேரியுடன் 4ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களையும் ட்ரெவிஸ் ஹெட்டுடன் 5ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களையும் பகிர்ந்த டேவிட் வோர்னர் அணிக்கு தெம்பூட்டிக் கொண்டிருந்தார்.

மிச்செல் மார்ஷ் 26 ஓட்டங்களையும் மானுஸ் லபுஸ்சான் 14 ஓட்டங்களையும் அலெக்ஸ் கெரி 19 ஓட்டங்களையும், ட்ரவிஸ் ஹெட் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்ளென் மெக்ஸ்வெல் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தமை அவுஸ்திரேலிய அணிக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. அவர் ஆட்டமிழந்த சொற்ப நேரத்தில் டேவிட் வோர்னர் 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தனஞ்சய டி சில்வாவின் பந்துவீச்சை எதிர்கொண்டபோது சமநிலை இழந்த டேவிட் வோர்னரை மின்னல் வேகத்தில் நிரோஷன் திக்வெல்ல ஸ்டம்ப் செய்து களம் விட்டகலச் செய்தார்.

எனினும் பின்வரிசையில் கெமரன் க்றீன் (13), பெட் கமின்ஸ் (35), மெத்யூ குனேமான் (15) ஆகியோர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி இலங்கை அணியை பதற்றத்தில் ஆழ்த்தினர்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு மேலும் 19 ஓட்டங்கள் தேவைப்பட தசுன் ஷானக்கவின் பந்துவீச்சில் 16 ஓட்டங்களைப் பெற்ற குனேமான், கடைசிப் பந்தில் ஆட்டமிழந்ததால் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்தது.

இலங்கை பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெவ்றி வெண்டர்சே 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை, சரித் அசலன்கவின் அபார கன்னி சதம், தனஞ்சய டி சில்வாவின் அரைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் 49 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ஒட்டங்களைக் குவித்தது.

இலங்கையின் ஆரம்பம் எவ்வாறு மோசமாக அமைந்ததோ அதேபோன்று முடிவும் மோசமாக இருந்தது.

இலங்கையின் முதல் மூன்று விக்கெட்கள் குறைந்த எண்ணிக்கைகளுக்கு சரிந்ததுடன் 10 ஆவது ஓவரில் இலங்கையின் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு வெறும் 34 ஓட்டங்களாக இருந்தது.

கடைசிக் கட்டத்தில் வீரர்களுக்கு இடையில் சரியான புரிந்துணர்வு இல்லாததன் காரணமாக அணித் தலைவர் தசுன் ஷானக்க உட்பட மூவர் ரன் அவுட் ஆகினர். அத்துடன் ஒரு ஓவர் மீதமிருக்க கடைசி 5 விக்கெட்கள் 51 ஓட்டங்களுக்கு சரிந்தன.

இதனிடையே சரித் அசலன்க 3 இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து இலங்கை அணியை நல்ல நிலையில் இட்டார்.

மொத்த எண்ணிக்கை 34 ஓட்டங்களாக இருந்தபோது தன்னுடன் இணைந்த தனஞ்சய டி சில்வாவுடன் 4ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 101 ஓட்டங்களை சரித் அசலன்க பகிர்ந்தார்.

தனஞ்சய டி சில்வா 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த சொற்ப நேரத்தில் அணித் தலைவர் தசுன் ஷானக்க 4 ஓட்டங்களுடன் வெளியேறினார். 58ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய தனஞ்சய டி சில்வா குவித்த 8ஆவது அரைச் சதம் இதுவாகும்.

இதனைத் தொடர்ந்து 6ஆவது விக்கெட்டில் இளம் வீரர் துனித் வெல்லாகேயுடன் 57 ஓட்டங்களையும் 8ஆவது விக்கெட்டில் வனிந்து ஹசரங்கவுடன் 34 ஓட்டங்களையும் அசலன்க பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டார்.

தனஞ்சய டி சில்வா ஆட்டமிழந்த பின்னர் இலங்கையின் மற்றைய விக்கெட்கள் சரியத் தொடங்கின. எனினும் மறுபக்கத்தில் அருமையாக துடுப்பெடுததாடிய சரித் அசலன்க, சர்வதேச ஒருநாள் அரங்கில் கன்னிச் சதத்தைக் குவித்து அணியைப் பலப்படுத்தினார்.

அணித் தலைவர் தசுன் ஷானக்க (4) ஆட்டம் இழந்த பின்னர் அசலன்கவுடன் இணைந்த இளம் வீரர் துனித் வெல்லாலகே (19) ஆறாவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

தனது 15ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அசலன்க தனது முதலாவது சதத்தை குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார்.

மிகவும் திறமையாகவும் தன்னம்பிக்கையுடனும் துடுப்பெடுத்தாடிய அவர், 106 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 110 ஓட்டங்களைப் பெற்றார்.

சாமிக்க கருணாரட்ன 7 ஓட்டங்களுடனும் ஜெவ்றி வெண்டர்சே, மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் ஓட்டம் பெறாமலும் ஆட்டமிழந்தனர்.

வனிந்து ஹசரங்க 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் மிச்செல் மார்ஷ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், பெட் கமின்ஸ் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், மெத்யூ குனேமான் 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சரித் அசலன்க

Related Posts