யாழில் நடைபெற்ற வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த துடுப்பாட்ட அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.
வடமாகாணத்தில் முதலாவதாக யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியில் அமைக்கப்பட்ட புற்தரை கிரிக்கெட் மைதானத்தைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரெரா யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் மற்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான சனத்ஜெயசூரியா முத்தையா முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மைதான கையளிப்பு நிகழ்வுக்கு பின்னர் சிநேகபூர்வ போட்டி ஒன்று நடைபெற்றது.
குறித்த போட்டி 20 ஓவர்களைக் கொண்ட போட்டியாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் மழை காரணமாக 12 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த அணி 12 ஓவர்கள் முடிவில் 92 ஓட்டங்களைப் பெற்று ஆறு விக்கெட்டுக்களை இழந்தது.
பதிலுக்கு துடுபெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அணி, 11.2 ஓவர்களில் 95 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
சனத் ஜெயசூரிய அதிரடியாக ஆடி நான்கு ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர்கள் அணியில் சனத்ஜெயசூரிய, முத்தையா முரளிதரன், உப்புல் சந்தன உள்ளிட்ட பிரபல வீரர்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.