உலகெங்கும் சட்டவிரோதமான வகையில் மீன்பிடித் தொழிலை எதிர்த்து போராடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் ஒரு பிரேரணையை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்துள்ளது.
சட்டவிரோதமான வகையில் இடம்பெறும் மீன்பிடி நடவடிக்கைகளை இலங்கை நிறுத்த வேண்டுமென்று நான்கு ஆண்டுகளாக தீவிரமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், அதை தடுத்து நிறுத்த இலங்கை காத்திரமான முன்னெடுப்புகளைச் செய்யவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
சர்வதேச நெறிமுறைகளுக்கு அமைய மீன்பிடித் தொழிலில் ஈடுபடாத நாடுகளில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதில்லை எனும் கொள்கையில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியுடன் செயல்படுகிறது.
இதேவேளை இலங்கையுடன் சேர்ந்து இவ்வகையிலான மீன்பிடியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட பெலீஸ், ஃபிஜி, பனாமா, டோகோ மற்றும் வனுவாட்டூ ஆகிய நாடுகள் வெற்றிகரமாக இப்பிரச்சினையை கையாள நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
கடுமையான தமது கொள்கைகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன என்று கூறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்சார் விவகாரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் மரியா தமான்கி, சட்டவிரோத மீன்பிடிகளைத் தடை செய்யுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஐந்து நாடுகள் தமது பாராட்டுகளைப் பெறும் அதேநேரம், துரதிஷ்டவசமாக இலங்கை அப்படியான பாரட்டை பெறமுடியாத நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்துவது குறித்த தமது கவலைகள் இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதை நீக்குவது தொடர்பில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வு தெரிவிக்கிறது என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உரிய அனுமதியின்றி ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் படகுகளைத் தடுத்து நிறுத்துவது அப்படியான தொழிலை நெறிமுறைப்படுத்தி கட்டுக்குள் கொண்டுவருவது, சர்வதேச மீன்பிடிச் சட்டங்களுக்கு உட்பட்டு தொழிலைச் செய்வது ஆகியவை தொடபில் நடவடிக்கை எடுக்காதது இலங்கையின் பலவீனத்தைக் காட்டுகிறது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.
இப்படியான காரணங்களாலேயே இலங்கை படகுகளால் பிடிக்கப்படும் மீன்களுக்கு தடை விதிக்க வேண்டிய நிலைப்பாட்டை தாங்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.
எனினும் வர்த்தக நடவடிக்கைகளை பாதிக்காத வகையில் இந்தத் தடை அடுத்த ஆண்டு ஜனவரி மத்தியிலிருந்து அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.