மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஐந்து இந்தியர்கள் உள்ளிட்ட எட்டு பேருக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. இதில் ஐந்து இந்திய மீனவர்கள் அண்மையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
எஞ்சியுள்ள மூன்று இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
இரு தரப்புக்களுக்கும் ஒரே விதமாக நியாயம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டடிக்காட்டினார்.
எனவே குற்றச் செயலில் ஈடுபட்டதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு தரப்பினருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஏனையவர்களை தண்டிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போதும் தாம் இந்த விடயம் குறித்து பாராளுமன்றில் வலியுறுத்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.