இலங்கை மீதான ஐநா விசாரணை: ‘இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை’

இந்தியா சென்றிருக்கும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேற்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் சந்தித்து பேசினார்.

glperies_susham_swaraj

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் இந்திய மீனவர்கள் விவகாரம், இலங்கை உள்நாட்டு போரில் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் இருநாட்டு வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கு இந்த ஆண்டில் மூன்றாவது தடவையாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சென்றுள்ளமை இருநாட்டுக்கு இடையேயான உறவுகள் வலிமை பெற்றுவருவதை காட்டுவதாக இந்திய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் சையத் அக்பருதீன் கூறினார்.

‘உள்நாட்டு போருக்கு பிறகு அந்நாட்டின் அரசாங்கம் மேற்கொண்டுவரும் சமாதன முயற்சிகள், வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளித்தல் போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டது. இந்திய அரசு இலங்கையில் செயல்படுத்திவரும் சிறப்பு திட்டங்கள் குறித்தும் விரிவாக பேசப்பட்டன’ என்றார் சையத் அக்பருதீன்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜீ.எல். பீரிஸ் இடையில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, இலங்கை ஆந்திராவில் செய்துள்ள முதலீடு குறித்து ஆராயப்பட்டுள்ளது.

சுமார் ஒரு பிலியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான இலங்கையின் இந்த முதலீட்டீன் மூலம், 38,500 இந்தியர்கள் வேலை வாய்ப்பு பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதா என்றும் இந்த விவகாரத்தில் இந்திய அரசின் தரப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

‘ஐநா மனித உரிமைகள் விசாரணைக் குழுவை அமைக்கும் விவகாரத்தில் இந்தியா ஏற்கனவே தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த பிரிவை எதிர்த்து வாக்களித்தது. அந்த நிலைப்பாட்டை இந்திய அரசு மாற்றவில்லை. அதே நிலைப்பாடே தொடர்கிறது’ என்று பதிலளித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் சையத் அக்பருதீன்.

Related Posts