யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் மதுபோதையில் இருந்தமையால் பஸ்ஸில் பயணித்தோர் அச்சத்துடன் பயணித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது;
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு மாலை 5.30 மணியளவில் புறப்பட்ட இ.போ.ச. பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் மதுபோதையில் இருந்துள்ளனர். நடத்துனர் பஸ் கட்டணத்தை பெற்று பற்றுச்சீட்டை வழங்க முடியாத நிலையில் இருந்துள்ளார். பின்னர் சாரதி கட்டணம் பெற்று பற்றுச்சீட்டை வழங்கிய நிலையில் பஸ் புறப்பட்டது.
இந்நிலையில் பஸ்ஸில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இவ்வாறான நிலையில் கிளிநொச்சி பொலிஸாரால் இரவு 7.30 மணியளவில் பஸ் மறிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் அதில் இருந்த கல்வியியல் கல்லூரி மாணவர்கள் தாம் உரிய வேளையில் அக்கரைப்பற்றிலிருக்க வேண்டும். எனவே இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் தமது பயணம் தாமதமாகுமென பொலிஸாரிடம் விநயமாக கேட்டுக்கொண்டதற்கு அமைய பொலிஸார் அரை மணி நேரத்தில் பஸ்ஸை செல்ல அனுமதித்ததுடன் இது குறித்து அக்கரைப்பற்று பொலிஸாருக்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாக பயணி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த பஸ் நேற்று இரவு 9 மணியளவில் வவுனியாவை தாண்டி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.