இலங்கை படுதோல்வி : தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா

இந்தியா – இலங்கை அணிகள் மோதிய 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது.

india-win

டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா புஜராவின் சதத்தால் 312 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது. பின்னர் 2-வது இன்னிங்சில் இந்தியா 274 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு 386 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்த இலக்கை நோக்கி பயணித்த இலங்கை அணி, நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. சில்வா 24 ரன்னுடனும், மேத்யூஸ் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று காடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மேலும் 3 ரன்கள் எடுத்த நிலையில் சில்வா 27 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த திரிமானே 12 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

6-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் குசால் பெரேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் அபாரமாக விளையாடியது. கடந்த இன்னிங்சில் அரைசதம் அடித்து அணியை காப்பாற்றிய குசால் பெரேரா இந்த இன்னிங்சில் சிறப்பாக விளையாடினார். ஒரு ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து இலங்கை அணிக்கு உயிரூட்டினார்.

இவர் களம் இறங்கும்வரை டிரா செய்தால் போதும் என்று நினைத்த இலங்கை அணி, அதன்பின் வெற்றிபெறும் நோக்கில் விளையாடியது. இதற்கு ஏற்ப மேத்யூசும் நம்பிக்கையோடு விளையாடினார்.

ஆடுகளம் புது பந்துக்கு மட்டுமே ஒத்துழைப்பு கொடுத்ததால் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் திணறினார்கள். 77-வது ஓவரில் இந்தியாவிற்கு ஒரு விக்கெட் கிடைத்தது. குசால் பெரேரா 70 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் சரியாக 80 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் தேனீர் இடைவேளை விடப்பட்டது.

தேனீர் இடைவேளை விட்டு வந்ததும் இந்தியா புது பந்தை எடுத்தது. புது பந்தின் முதல் ஓவரை இசாந்த் சர்மா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் மேத்யூஸ் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். அவர் 110 ரன்கள் எடுத்தார். அத்துடன் போட்டி இந்தியா பக்கம் திரும்பியது.

அடுத்து வந்த ஹெராத், பிரசாத்தை அஸ்வின் வெளியேற்ற, கடைசி விக்கெட்டாக பிரதீப்பை மிஸ்ரா வெளியேற்றினார். இதனால் இலங்கை அணி 268 ரன்னில் அவுட்டாகி 117 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-1 என தொடரைக் கைப்பற்றியது. இசாந்த் சர்மா 3 விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

ஆட்டநாயகன் விருது இந்தியாவின் புஜாரவுக்கும் தொடர் நாயகன் விருது அஸ்வினுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts