19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கை இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்த உலகக் கோப்பையின் லீக் சுற்றில் அயர்லாந்து, நியூஸிலாந்து, நேபாள அணிகளையும், காலிறுதியில் நமீபியாவையும் தோற்கடித்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரிஷப் பந்தும் இஷான் கிஷனும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் அதற்குப் பிறகு வந்த வீரர்கள் பொறுப்புடன் ஆடினார்கள். அன்மோல்ப்ரீத் சிங் அதிகபட்சமாக 72 ரன்களும் எஸ்.என். கான் 59 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களும் எடுத்தார்கள். இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிறகு ஆடிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது. 42.4 ஓவர்களில் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மெண்டிஸ் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் மயாங் டகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அரையிறுதியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
இறுதிப் போட்டி பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறுகிறது.