இலங்கை தோல்வி : இறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7ஆவது ஆட்டத்தில் இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த இரு அணிகளிடையேயான ஆட்டம் மிர்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க வீரர் சண்டிமல் 4 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து ஷேஹன் ஜெயசூரியா 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதானமாக ஆடிவந்தார் தில்ஷன். அடுத்து வந்த கபுகெடரா அணியின் விக்கெட் சரிவைத் தடுத்து, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், 18 ரன்கள் எடுத்திருந்த தில்ஷன் கேட்ச் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் மேத்தியுஸ் 18 ரன்கள் எடுத்து பாண்டியாவின் பந்துவீச்சில் போல்டானார். தொடர்ந்து வந்த சிறிவர்தனா சற்று நிலைத்து 22 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், 30 ரன்கள் எடுத்த கபுகெடராவும் பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து வந்த திசர பெரரா சற்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். நுவன் குலசேகரா 13 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சமீரா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய அணி 139 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். உடன் வந்த ரோஹித் சர்மா 15 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த விராட் கோலியும் சுரேஷ் ரெய்னாவும் நிலைத்து ஆடினார்.
எனினும், ரெய்னா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யுவராஜ் சிங் அதிரடியாக ஆடினார். இந்நிலையில் கோலி அரைசதம் கடந்தார்.

யுவராஜ் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 2 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த தோனி வழக்கமான பானியில் சிக்ஸர் அடித்து ஆடினார். இந்திய அணி வெற்றிக்கு 6 பந்துகளில் 1 ரன் தேவை இருந்த நிலையில் கோலி பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்தார்.

இதையடுத்து இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி 7 ரன்களுடனும், கோலி 56 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கோலி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Related Posts