Ad Widget

இலங்கை தமிழர் மோகன் மரணம்: ராயப்பேட்டையில் பதற்றம்!

போலி பாஸ்போர்ட் வழக்கு விசாரணைக்காக இலங்கை தமிழர் மோகன் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

பின்னர் அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அவரது உடல் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனையை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நடத்த வேண்டும் என்று ஆலந்தூர் மாஜிஸ்திரேட்டிடம் மனு கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மோகன் பிரேத பரிசோதனை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நடைபெறுகிறது.

இலங்கை தமிழர் மோகன் பலியான சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அவரது உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு விடுதலை சிறுத்தை, தந்தை பெரியார் தி.க., ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மோகன் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி கோஷம் எழுப்பினார்கள். திடீரென்று மறியலிலும் ஈடுபட்டார்கள். உடனே ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் கோபாலகுரு தலைமையில் போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சு நடத்தினார்.

தொடர்ந்து ராயப்பேட்டை ஆஸ்பத்திரி முன்பு அவர்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரி முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் முன்பு முற்றுகையிடுவதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். கைதான 64 பேரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

போலி பாஸ்போர்ட் வழக்கு விசாரணைக்கு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் மோகனை விசாரணைக்குப் பின் மேடவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் அங்கு இலங்கைத் தமிழர் தொழிலதிபர் மோகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் மருத்துவமனை சிகிச்சையில் இறந்து விட்டதாகவும் போலீசாரால் கூறப்படுகிறது. இது நம்பும் படியாக இல்லை. இது கண்டனத்துக்குரியது.

விசாரணையிலிருக்கும் ஒருவரை பாதுகாப்பதும் சட்டவிதிகளை மீறாமல் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதுவும்தான் காவல்துறையின் பணியாகும். விசாரணைக்குப்பின் ஒருவர் நெஞ்சுவலியால் இறந்து விட்டார் என்று கூறுவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது.

எனவே தமிழக அரசு இதனை கொலைவழக்காக பதிவு செய்து குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நீதியின் முன்னால் நிறுத்தி தகுந்த தண்டனையை பெற்றுத்தருவதுடன் இறந்தவர் குடும்பத்திற்குரிய இழப்பீடுகள் உதவிகளை அரசு செய்து தரமுன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts