இலங்கை தமிழர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால் இன்று சுதந்திரதினம் கொண்டாட முடியாத நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இலங்கையின் 65வது சுதந்திரதினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது. இந்நிலையிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழர்களுக்கான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை. அதேசமயம் 10 லட்சம் தமிழர்களின் வாக்குரிமைகள் மீறப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றதுடன், தனிச்சிங்கள சட்டம், தனிச்சிங்கள நாடாக இருக்கின்றதுடன், தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சுதந்திர தினத்தினை கொண்டாட முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.
எப்போது தமிழர்களுக்கு தனியுரிமை கிடைக்கின்றதோ அன்று தான் தமிழர்கள் சுதந்திர தினம் கொண்டாட முடியும்.
இன்று நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பட்டு, தமிழர்கள் மீதான படுகொலைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் இனவாதங்கள் அழிக்கப்பட்டு தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் காலத்தில் தான் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் அன்றைய தினத்தினைதான் தமிழர்கள் சுதந்திர தினமாக கொண்டாட முடியும்.
அவ்வாறான நிலைப்பாட்டில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தற்போது இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.