இலங்கை செல்லக்கூடாதென இளையராஜா வீடு முன்பு போராடியவர்கள் கைது

இலங்கைக்கு செல்லக் கூடாது எனக் கூறி, இசையமைப்பாளர் இளையராஜா வீடு முன்பு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இலங்கையில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவுள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ராஜசிங்கம் என்பவரும் நோர்வேயிலுள்ள கமல் என்பவரும் இணைந்து நடத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளக் கூடாதென தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் என, இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான நிலங்கள் இன்னும் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை, இன்றும் வெள்ளை வண்டியில் தமிழ் இளைஞர்கள் கடத்திக் கொள்ளப்படுகின்றார்கள், தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகின்றனர், தமிழீழ மண்ணில் சிங்களர் குடியேற்றம் விரைவுப்படுத்தப்படுகின்றது, அரசியல் கைதிகள் விடுதலைக் குறித்து ஜனாதிபதியிடம் வலியுறுத்தியும் இன்றளவிலும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை, போர் முடிந்தநிலையிலும் இரண்டு இலட்சத்திற்கும் மேலான சிங்கள படையினர் வட மாகாணத்தில் நிலைகொண்டிருப்பது மிகப்பெரிய ஒடுக்குமுறை நடவடிக்கை என்று வடமாகாண சபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ மக்கள் அடக்குமுறைக்கு மத்தியில் உரிமைகளை இழந்த நிலையில் இருக்கும் இக்கால சூழலில் இசை நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts