இலங்கை சிறையில் உணவு தராமல் எங்களை கொடுமைப்படுத்தினர்

நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 77 பேர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை கடந்து வந்து மீன் பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

fishermen

படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான மீனவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு, இலங்கை அரசை வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் தமிழக மீனவர்கள் 77 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களை இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களை அமயா மற்றும் ராணி அபக்கா என்ற 2 ரோந்து கப்பல்களில் அழைத்துக் கொண்டு காரைக்கால் துறைமுகத்துக்கு வந்தனர். அங்கு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் 77 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.

மீன்வளத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ், நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி ஆகியோர் மீனவர்களை வரவேற்று உணவுப் பொட்டலம் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.

அதன் பின்னர் மீனவர்கள் கண்ணீர் மல்க கூறியதாவது:-

எங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதுவரை இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 102 படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி எங்களை கைது செய்தனர். எங்களுக்கு சிறையில் சரியாக உணவு தரவில்லை. கொத்தடிமைகளைபோல நடத்தினர். இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Posts