இலங்கை சிங்கங்களை வென்ற வங்க புலிகள்!

ஆசியக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில், நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய ஷப்பிர் ரகுமான் (Sabbir Rahman), 80 ஓட்டங்களைக் குவித்தார்.

இவரது இந்த அபார ஆட்டத்தின் உதவியுடன், பங்களாதேஷ், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து, 147 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி 148 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன், அடுத்ததாக இலங்கை துடுப்பெடுத்தாடியது.

எனினும் அந்த அணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வரிசையாக வௌியேறினர். இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக தினேஸ் சந்திமால் 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இறுதி ஓவரில் 4 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க 32 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இலங்கை அணி இக்கட்டான நிலையை எதிர்கொண்டது.

எனினும் அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து, 124 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

இதற்கமைய பங்களாதேஷ் அணி 23 ஓட்டங்களால் வெற்றி வாகை சூடியுள்ளது.

Related Posts