இலங்கை சரியான பாதையில் செல்கின்றது – உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் கண்காணிப்பு, சோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைகளின் ஊடாக இலங்கை சரியான பாதையில் செல்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, பரிசோதனைகளை அதிகரித்ததன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களை விரைவாக கண்டறிய முடிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

கட்டுப்படுத்துதல் மற்றும் தணித்தல் பற்றிய விரிவான அணுகுமுறையைப் பயன்படுத்தி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் சிறப்பான திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிரான நடவடிக்கைக்காக கடந்த மே 5ஆம் திகதியன்று உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு அவசிய ஆய்வுக்கூட உபகரணங்கள், வைத்தியசாலை உபகரணங்கள் உட்பட்ட மருத்துவப் பொருட்களை வழங்கியதாகவும் அந்த அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் முன்னின்று செயற்படும் சுகாதார பணியாளர்களை பாதுகாக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் மேலும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Related Posts