பெங்களூரு நகர ஷாப்பிங் மாலில் நடைபெற்றதாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வீடியோவால், தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மைசூர் நகரின் கே.ஆர்.மொகல்லா பகுதியை சேர்ந்தவர் 32 வயதான தொழிலதிபர் தீபக் குல்கர்ணி. இவர் கடந்த மாதம் 29ம் தேதி தனது பேஸ்புக்கில் கொலை தொடர்பான ஒரு வீடியோவை பதிவு செய்து, இந்த படு பயங்கர கொலை பெங்களூரின் மையப்பகுதியிலுள்ள ஒரு ஷாப்பில் மாலில் நடைபெற்றது என்று குறிப்பிட்டு ஷேர் செய்திருந்தார்.
இந்த வீடியோ துரிதமாக ஷேர் செய்யப்பட்ட நிலையில், போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. சம்மந்தபட்ட பகுதியை சேர்ந்த போலீசார், ஷாப்பிங் மாலுக்கு விரைந்து சென்று, கொலை நடந்தது உண்மையா என்று விசாரித்துள்ளனர். ஆனால், அங்கு அப்படி ஏதும் நடைபெறவில்லை என்ற தகவல் தெரியவந்தது.
இதையடுத்து வீடியோவை ஆய்வு செய்து பார்த்தபோது, அந்த சம்பவம் இலங்கையில் முன் எப்போதோ, நடைபெற்றது என்று தெரியவந்தது. இதையடுத்து, வதந்தி பரப்பிய குற்றத்திற்காக, தீபக் குல்கர்ணி கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் அவர் வெளியே வந்துள்ளார்.
பெங்களூர் மத்திய பிரிவு துணை கமிஷனர் சந்தீப் பாட்டில் இதுபற்றி கூறுகையில், “இலங்கை மாலில் நடந்த சம்பவத்தை பெங்களூர் என்று குல்கர்ணி குறிப்பிட்டதால், மக்கள் பீதியடைந்தனர். நகரின் மையப்பகுதியில் படு பயங்கர கொலை நடந்துள்ளது.. போலீஸ் கண்டுகொள்ளவில்லை என்ற ரீதியில் புகார்கள் வந்தன. மக்களை தவறாக வழிநடத்திதற்காக குல்கர்ணி மீது வழக்குபோடப்பட்டது. சோஷியல் மீடியாக்கள் வழியாக மக்களை பீதிக்குள்ளாக்குவதை தடுப்பதே எங்கள் நோக்கம்” என்றார்.