இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் ஜெயவர்த்தன மோதல்

இலங்கை கிரிக்கெட் அணியின் தூண்களில் ஒருவராக விளங்கியவர், முன்னாள் கேப்டன் 38 வயதான மஹேலா ஜெயவர்த்தனே. 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒரு நாள் போட்டியில் இருந்தும், 2014-ம் ஆண்டு உலக கோப்பையுடன் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்ட பின்னர் அவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஆலோசகராக செயல்பட்டார். ஜெயவர்த்தனே சுழற்பந்து வீச்சை சிறப்பாக கையாண்டவர். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் சுழற்பந்து வீச்சை சமாளிப்பதில் கொஞ்சம் பலவீனமானவர்கள். இந்த வகையில் உதவுவதற்காக அவர் அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த மாதம் (மார்ச்) நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணிக்கு மஹேலா ஜெயவர்த்தனே ஆலோசகராக மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் 10 நாட்கள் இங்கிலாந்து அணியினருடன் தங்கி இருப்பார்.

இது தான் இப்போது இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கொதிப்படைய செய்துள்ளது. ஏனெனில் 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. இதனால் அவர் சொந்த அணிக்கு குழிப்பறிக்கும் செயலில் ஈடுபடுகிறார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் திலங்கா சுமதிபாலா கூறும் போது,

‘ஜெயவர்த்தனேவின் கிரிக்கெட் அறிவுத்திறன் மீது எனக்கு நிறைய மதிப்பும், மரியாதையும் உண்டு. ஆனால் இப்போது உலக கோப்பையில் எங்களுடன் ஒரே பிரிவில் இருக்கும் இன்னொரு அணிக்கு ஆலோசகர். ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குள்ளேயே தேசிய அணிக்கு கேப்டனாக இருந்த ஒருவர் உலக கோப்பையில் இன்னொரு அணிக்கு ஆலோசகராக செல்வது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஏதாவது ஒரு கிளப், மாகாண அணி அல்லது ஐ.பி.எல். அணிக்கு ஆலோசகராக செல்லலாம். இலங்கை அணிக்காக ஆடியவர் என்பதால் இலங்கை அணியின் பலம், பலவீனம் என்ன என்பது அவருக்கு தெரியும். உலக கோப்பைக்கு அணி எப்படி திட்டமிட்டு தயாராகும் என்பதையும் அறிவார். இவை எல்லாம் மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கக்கூடியது’ என்றார்.

திலங்கா சுமதிபாலாவின் புகாருக்கு ஜெயவர்த்தனே சுடசுடப் பதில் அளித்துள்ளார். ஜெயவர்த்தனே நேற்று அளித்த பேட்டியில், ‘இங்கிலாந்து அணியில் எனது பங்களிப்பு என்னவென்றால், அந்த வீரர்களை மேம்படுத்துவது மற்றும் சுழற்பந்து வீச்சு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் உதவுவது ஆகியவை மட்டுமே. ஆலோசகர் பதவியை ஏற்கும் போது உலக கோப்பை 20 ஓவர் போட்டிக்கான பிரிவுகள் அறிவிக்கப்படவில்லை. இலங்கை அணி பற்றி தகவல்களை தருவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் என்னை இந்த பதவியில் அமர்த்தவில்லை. அந்த பணியை செய்ய அவர்களிடம் நிபுணர்களும், பயிற்சியாளர்களும் இருக்கிறார்கள். இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து இத்தகைய கருத்துகள் வருவது ஏமாற்றம் அளிக்கிறது.

ஒரு நாள் போட்டியில் இருந்து நான் ஓய்வு பெற்று ஓராண்டு ஆகி விட்டது. 20 ஓவர் கிரிக்கெட் அணியில் இருந்து விலகி ஏறக்குறைய 2 ஆண்டுகள் ஓடி விட்டது. இலங்கை வீரர்கள் பற்றிய குறிப்பிட்ட தகவல்களையும், யுக்திகளையும் நான் சொல்லிக் கொடுக்கிறேன் என்று வைத்துக் கொண்டாலும், 2 ஆண்டுகளுக்கு முன்பாக நான் அணியில் அங்கம் வகித்த போது, இருந்த அதே யுக்திகளை தான் இப்போதும் கடைபிடிக்கிறார்கள் என்றால், அது தான் அந்த அணிக்கு பிரச்சினை. இல்லையா?

எனது மனசில் இலங்கை கிரிக்கெட்டுக்கு உயர்ந்த இடம் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் நானும் தொழில்ரீதியிலான நபர் என்பதை மறந்து விடக்கூடாது. மற்ற வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் வாய்ப்பு வந்தால் அதில் ஒன்றும் தவறு இல்லை. எனது தொழில்தர்மம் பற்றி சுமதிபாலா கேள்வி எழுப்பி இருப்பது நகைப்புக்குரியது’ என்றார்.

Related Posts