இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு தங்களது ஓய்வறையில் பிஸ்கட் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், அதனை அணி முகாமையாளர் அசங்க குருசிங்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவுடனான கண்டியில் இடம்பெற்ற 3 ஆவது டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தில் துடுப்பாடிக் கொண்டிருந்த இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் ஒருவர் பிஸ்கட் கேட்டுள்ளார்.
ஆயினும் அவருக்கு பிஸ்கட் கொடுப்பதற்கு அணியின் முகாமையாளர் குருசிங்க அனுமதி வழங்கவில்லை என்று அறிய வருகின்றது.
இதனால் கோபமுற்ற இலங்கை வீரர்கள் சிலர் சம்பவத்தின் பின்னர் குருசிங்கவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓய்வறையில் சில பொருட்களை உடைத்ததாகவும் அறிய வருகின்றது.
இது தொடர்பில் அணியின் முகாமையாளர் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அணியின் உடற்கூற்று (Phisho) முகாமையாளரின் ஆலோசனைக்கு அமைய வீரர்கள் உண்பதற்கு எல்லாவற்றையும் கொடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும், அதன் காரணத்தாலேயே அந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா கிரிக்கட்டிலும், அணிக்குள்ளும் நிலவும் ஸ்திரமற்ற நிலைமைக்கு குருசிங்கவே காரணம் என்பதனால் அவரை பதவி விலக்கும் முடிவில் விளையாட்டுத்துறை அமைச்சர் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.