இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்சோ என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஒரு மீனவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கடலோர எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது தொடர் கதையாகி உள்ளது.

துப்பாக்கி சூடு நடத்துவது மட்டுமல்லாமல் படகுகளையும் பறிமுதல் செய்து அவர்களது நாட்டிற்கு எடுத்துச் செல்வதால் அவர்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் 300 படகுகளில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதனிடையே இந்திய கடல் எல்லையான ஆதம்பாலம் என்ற பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சிங்கள கடற்படை மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ (22) என்ற மீனவருக்கு கழுத்தில் குண்டு பாய்ந்தது. கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் கரைக்குத் திரும்பிய போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மீனவரான சரோன் படுகாயங்களுடன் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts