இலங்கை ஆஸ்திரேலியா முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று

மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் இன்று நடக்கிறது.

ஆஸ்திரேலிய முன்னணி வீரர்கள் அனைவரும் தற்போது டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இந்தியாவுக்கு வந்து விட்டனர். இதனால் இது 2-ம் தர அணியாகவே பார்க்கப்படுகிறது. கேப்டன் ஆரோன் பிஞ்ச், ஜேம்ஸ் பவுல்க்னெர், கம்மின்ஸ் ஆகியோர் மட்டுமே ஓரளவு அனுபவ சாலிகள்.

இருப்பினும் டிராவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ், கிளைஞ்சர், பென் டங் போன்ற வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கே உரிய அதிரடி காட்டுவதில் திறமைசாலிகள். இதனால் ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிட முடியாது.

இலங்கை அணியில் கேப்டன் மேத்யூஸ் காயத்தால் விலகி விட்டதால் அந்த அணியை உபுல் தரங்கா வழிநடத்துகிறார். காயத்தால் ஒதுங்கி இருந்த ‘யார்க்கர் மன்னன்’ 33 வயதான மலிங்கா ஒரு ஆண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறார். அவரது பந்து வீச்சு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இலங்கை அணியிலும் பெரும்பாலான வீரர்கள் அனுபவமற்றவர்கள் என்றாலும், வெற்றியுடன் தொடங்க முடியும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

தரங்கா கூறுகையில், ‘ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் சமீபத்தில் பிக்பாஷ் 20 ஓவர் போட்டியில் விளையாடியவர்கள். நன்றாகவும் செயல்பட்டு உள்ளனர். இன்னும் அந்த அணி சிறந்ததாக இருப்பதாக நினைக்கிறேன்’ என்றார்.

இவ்விரு அணிகளும் இதுவரை பத்து 20 ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 4-ல் ஆஸ்திரேலியாவும், 6-ல் இலங்கையும் வெற்றி கண்டுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மைக்கேல் கிளைஞ்சர், பென் டங், டிராவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ், டிம் பெய்ன், ஆஷ்டன் டர்னர், ஜேம்ஸ் பவுல்க்னெர், பேட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஆண்ட்ரூ டை.

இலங்கை: நிரோஷன் டிக்வெலா, உபுல் தரங்கா (கேப்டன்), முனவீரா, குணரத்னே, ஸ்ரீவர்த்தனே, கபுகேதரா, சீக்குகே பிரசன்னா, குலசேகரா, உதனா, மலிங்கா, விகும் சஞ்ஜெயா.

Related Posts