இலங்கை அரசுடன் நாம் இணக்க அரசியலை மேற்கொண்டாலும் அவர்கள், எங்களை எப்போதும் முழுமையாக நம்புவது கிடையாது. ஆயுதம் ஏந்திய அமைப்பு என்ற ரீதியிலேயே அவர்கள் எங்களைப் பார்க்கிறார்கள் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் ஞாயிற்றுக்கிழமை (27) தெரிவித்தார்.
ஈ.பி.டி.பி அரசியலில் வெல்லக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அதிக அக்கறையும் கொண்டிருப்பதும் இலங்கை அரசுதான். நாங்கள் அதிக அரசியல் பலத்துடன் வென்றால் இலங்கை தமிழரது பிரச்சினை தீர்க்கப்படவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அரசு வரவேண்டும் என்ற அச்சம் தான் இந்த நிலைக்கு காரணம். அதனால் மறைமுகமாக தமிழர் பிரச்சினை தீர்க்கப்படக்கூடாது என்ற நிலையை உறுதியாக வைத்துக்கொள்ளவே இலங்கை அரசும் விரும்புகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம், வரணி, குடமியன் பகுதி மக்களது வாழ்வாதார விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக அப்பகுதி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு குடமியன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
விடுதலைப் புலிகளது இராணுவப் பலத்தை பலவீனப்படுத்தியது இந்த சுயநலம் கலந்த தேசியவாத தலைவர்களது காய்நகர்த்தல்கள் தான். யுத்த காலத்தில் புலிகளுடன் நேரடியாக பேச்சுக்களை மேற்கொள்ள முடியாமையால் உலகநாடுகள் புலிகளது பிரதிநிதிகளாக அரசியல் பேச்சுக்களுக்கு அழைக்கப்பட்டவர்கள் தான் இந்தக் கூட்டமைப்பினர்.
இதன்போது, கூட்டமைப்பினர் உலகத்தின் பார்வையை தமிழர் உரிமை மீது செலுத்தவிடாது புலிகளின் இராணுவ பரிணாமத்தின் மீது கவனம் செலுத்த வைத்ததன் மூலமே புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடிக்க வைத்து, புலிகளின் இராணுவ பலத்தையும் பலவீனமடையச் செய்தனர்.
கடந்த காலத்தில் அரசியல் ரீதியான தீர்வை பெற முடியாமைக்கு காரணம், மக்களது கருத்துக்களையும் அவர்களது எதிர்பார்ப்புகளையும் புறந்தள்ளி விட்டு ஒரு தலைபட்சமாக தமிழ் தேசியவாத தலைவர்கள் மேற்கொண்டு வந்த போலித்தனமான அரசியல் வியூகங்கள் தான் தமிழர்களது அதிகாரங்கள் குறைந்து செல்வதற்கு காரணமாகின.
இந்தியாவை பகைத்துவிட்டு இலங்கையிலிருந்து எந்த விதமான ஆயுதப் போராட்டத்தையும் செய்ய முடியாது என்பது வெளிப்படையான விடயம். 1990இல் இருந்து இன்று வரை வடக்கு மக்களை பாதுகாத்த பங்கு எமது கட்சிக்கே உரியது. இதில் யாரும் பங்குகோர முடியாது.
மக்கள் வறுமையிலும் பாதுகாப்பின்றியும் வாழும்போது குடாநாட்டை பாதுகாக்க வராத கூட்டமைப்பினர், வடபகுதிக்கான தேர்தலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவால் அறிவிக்கப்பட்டவுடன் பதவி சுகத்திற்காக உடனடியாக குடாநாட்டிற்குள் வந்து முகாமிட்டவர்கள் தான் இன்றைய கூட்டமைப்பினர்.
வெறும் ஆயிரம் உயிர்களுடன் முடிய வேண்டிய போராட்டம் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்தும் தீர்வை எட்ட முடியாத அளவுக்கு தள்ளப்பட்டதிற்கு எமது ஆரம்பகால அரசியல் நகர்வுகளும் அதில் எந்தவித மாற்றங்களுமின்றி இன்று வரை தொடர்வதும் தான் காரணம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.