வவுனியாவில் இன்று(11) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் இடம்பெற்றது
ஐநாவின் முன்னைய தீர்மானம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதற்கு ஆதரவு வழங்க கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி,ரெலோ,புளொட் ஆகியன தீர்மானம் எடுத்துள்ளதாகவும் இத் தீர்மானத்தில் உடன்படாது ஈ.பி.ஆர்.எல்.எப் வெளிநடப்பு செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.அந்த அடிப்படையில் ஐநாவில் வழங்ப்பட உள்ள கால அவகாசத்தை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எதிர்க்காது.ஆனால் கடுமையான நிபந்தனைகளுடன் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று மட்டும் வலியுறுத்தும் , கால அவகாசம் வழங்கப்படவேண்டாம் என்று வலியுறுத்தாது.
இது தொடர்பில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
”ஐ.நா மனித உரிமைப் பேரவையால் 2015 ஐப்பசி 1ம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட மனித உரிமை ஆணைக்குழவின் 30/1 தீர்மானத்தின் இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும்.இவை கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறைவேற்றப்படுவதை ஐ.நா மனித உரிமைகள் ஸ்தானிகரின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் நிறுவி மேற்பார்வை செய்ய வேண்டும்.
இலங்கை அரசாங்கம் மேற்சொன்ன விடயங்களை தகுந்த பொறிமுறையின் மூலம் நிறைவேற்றத்தவறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தத் தீர்மானத்தின் கீழ் கிடைக்கவேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும்வண்ணமாக சர்வதேசப் பொறிமுறைகளை ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுதிசெய்ய வேண்டும்,
மேற்படி தீர்மானங்களுக்கு ஈபிஆர் எல் எப் இணங்கவில்லை என கௌரவ நடேசு சிவசக்தி (பா.உ) தெரிவித்தார்.”
என்றுள்ளது
மேற்படிக்கூட்டத்திற்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.கூட்டத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சிப்பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.