இலங்கை அரசாங்கத்துடன் பேசிப்பலனில்லை என்பதில் தலைவர் பிரபாகரன் உறுதியாக இருந்தார்!

இலங்கை அரசாங்கத்துடன் பேசிப்பலனில்லை, அடித்துத்தான் பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டில் எம்மை வலுப்படுத்திக் கொள்வதற்கான இடைக்கால ஏற்பாடாகவே தலைவர் பிரபாகரன் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை வழிநடத்தியிருந்தார் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு மற்றும் பிரசாரக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் நடைபெற்றது. அதில் உரையாற்றுகையிலேயே துளசி மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் கனடா ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழீழக் கொள்கையைக் கைவிட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்ததை நடத்தியபோது மௌனமாக இருந்தவர்கள் தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசுடன் நடாத்தும் பேச்சுக்கள் தொடர்பில் விமர்சிப்பதாக சாடியிருந்தார். இந்நிலையிலேயே ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசியின் கருத்து கூட்டத்தில் பெரும் கரகோஷத்தை ஏற்படுத்தியிருந்தது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா, தமிழரசுக்கட்சியின் ‘தாயகம்’ அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கொள்கைப் பிரகடனங்களை உள்ளடக்கிய 15 பக்கங்களை கொண்ட விஞ்ஞாபனத்தை மாவை சேனாதிராஜாவினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வழங்க, அதனை அவர் கட்சித் தலைவர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், டெலோ அமைப்பின் செயலாளர் க. சிறிகாந்தா, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், விந்தன் கனகரட்னம் உட்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Related Posts