இலங்கை அரசாங்கத்தின் 2015-ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 95 பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.152 பேர் பட்ஜெட்டுக்கு ஆதரவாகவும், 57 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
அரசாங்கத் தரப்பிலிருந்து மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வெளியேறியிருந்த நிலையில், இந்த பட்ஜெட் மீதான இறுதி வாக்கெடுப்பு பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிடுவதற்காக அரசாங்கத்திலிருந்து வெளியேறியிருந்த மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்கெடுப்பின்போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.