அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 82 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், நேற்று 2வது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி இலங்கை அணி சார்பாக களமிறங்கிய ஆரம்ப வீரர் தனுஷ்க குணதிலக இரண்டே ஓட்டங்களுடன் வௌியேறி ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து களத்தில் இருந்த டில்ஷானும் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பின்னர் வந்த குஷல் மென்டீஸ் நிதான ஆட்டத்தை வௌிப்படுத்தினார்.
அவருக்கு ஈடுகொடுத்த தினேஷ் சந்திமாலும் அதிரடியாக ஆடி 48 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வௌியேறினார்.
எனினும் மென்டிஸ் பொறுமையாக ஆடி 69 ஓட்டங்களை விளாசி இலங்கைக்கு வலுவூட்டினார்.
அத்துடன் மெத்தியூஸ் 57 ஓட்டங்களையும் குஷல் பெரேரா 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை, 288 ஓட்டங்களை குவித்தது.
இதன்படி 289 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் மாத்திரம் நிலைத்து ஆடி 76 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
எனினும் ஏனைய வீரர்கள் எவராலும் அரைச்சதம் கூட பெற முடியாத நிலையில் 47.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட அந்த அணி, 206 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தோல்வியைத் தழுவியுள்ளது.
ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக மேத்யூஸ் (இலங்கை) தேர்வு செய்யப்பட்டார்