இலங்கை, இந்திய அணிகளுக்கிடையில், கண்டி-பல்லேகல சர்வதேச மைதானத்தில், கடந்த 27ஆம் திகதியன்று இடம்பெற்ற போட்டியின் போது, இலங்கை கிரிக்கெட் அணியினரை இலக்குவைத்துத் தண்ணீர்ப் போத்தல்களை வீசிய, இரசிகர்களைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரிலேயே, இந்த சம்பவம் தொடர்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை அணியின் வீரர்களை நோக்கி, தண்ணீர்ப் போத்தல்கள் மற்றும் கற்களை வீசிய, இரசிகர்களை வீடியோ காட்சிகளின் ஊடாக, இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டள்ளன என்றும் அறியமுடிகிறது.
எதிர்காலங்களில், இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதவகையில், நடவடிக்கைகளை எடுப்பதற்கே, வீரர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியதுடன், இலங்கை கிரிக்கெட்டின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியவர்களைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இலங்கையில் இனிமேல் நடைபெறவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது, சீருடை மற்றும் சிவில் உடைகளில் பாதுகாப்புத் தரப்பினரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு பொலிஸார் ஆலோசித்து வருவதாகவும் அறியமுடிகிறது.
இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டி, பல்லேகல சர்வதேச விளையாட்டு மைத்தானத்தில் பகல் – இரவுப் போட்டியாக, கடந்த 27ஆம் திகதியன்று நடைபெற்றது அந்தப் போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரில் 3-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது.