இலங்கை அணியின் ஆட்டத்தை சிரம் தாழ்த்தி பாராட்டிய விராட் கோலி

செம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் அபார துடுப்பெடுத்தாட்டத்தால் இந்திய அணி தோல்வி தழுவியதையடுத்து இந்தத் தொடர் திறந்த தொடராகியுள்ளது.

குழு பி-ல் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுமாறு தொடர் மாறியுள்ளது. இது அன்று பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதாலும் நேற்று இலங்கை அணிஇந்தியாவின் இலக்கை வெகு எளிதாக விரட்டி வெற்றி பெற்றதாலும் ஏற்பட்டுள்ள நிலையாகும்.

இந்த போட்டி குறித்து விராட் கோலி கூறும்போது,

“துடுப்பாட்டத்தை நன்றாக ஆடியதாகவே நினைக்கிறேன். முதலில் அடித்தளத்தை நன்றாக அமைத்துப் பிறகு கடைசியில் அடித்து நொறுக்கவே திட்டமிட்டோம். இப்படித்தான் எப்போதும் ஆடி வருகிறோம்.

50 ஓவர்களிலும் அடித்து நொறுக்கி ஆடும் அணியாக நாம் இருந்ததில்லை. ஆனால் இங்கு ஒரு அணி (இலங்கை) ஒரு வலுவான மன நிலையில் களமிறங்கி மிக அருமையாக ஆடி வெற்றி பெற்றிருக்கும் போது அந்த அணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாம் நமது சிரம் தாழ்ந்து, ’மிக நன்றாக ஆடினீர்கள்’ என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஓட்டங்கள் போதாது என்று கூற முடியாது, நாங்கள் நன்றாகத்தான் திட்டமிட்டு ரன் விகிதத்தை உயர்த்தினோம். போதுமான ரன்கள் இருந்ததாகவே கருதுகிறேன். ஆனால் திரும்பிப் பார்க்கும் போது சில தருணங்களில் கொஞ்சம் அடித்து ரன் விகிதத்தை உயர்த்தியிருக்கலாம் என்று கூற முடியும். ஆனால் இதை ஒரு பெரிய விவகாரமாக நான் கருதவில்லை.

வேண்டுமானல் வரும் ஆட்டத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அடித்து ஆடி இன்னும் 20 ஓட்டங்களை கூடுதல் ஆதாரமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யலாம். அதுவும் இந்த முடிவைப் பார்க்கும் போது அத்தகைய முயற்சி தேவைப்படும் என்றே கருதுகிறேன்.

பந்துவீச்சாளர்களும் ஓரளவுக்கு நன்றாகவே வீசினர். நம் அணி தோற்கடிக்கப்பட முடியாத அணியல்ல. இலங்கை அணி அவர்கள் திட்டமிடலை சரியாக பிரயோகப்படுத்தியதற்கு நாம் பாராட்டியே ஆகவேண்டும். நாம் சரியாக திட்டங்களை பிரயோகப்படுத்தவில்லை. அப்படியிருக்கும் போது சிந்தனைக்கு எப்போதும் தீனி இருந்து கொண்டுதான் இருக்கும். மேலும் இந்த தொடரில் 8 அணிகளும் ஏதோ ஒரு விதத்தில் செம்பியன் அணிகளே, ஆகவே இந்தத் தொடர் இவ்வாறு சவாலான தொடராக அமையும் என்று எதிர்பார்த்ததே. எனவே மற்ற அணிக்கும் நாம் அதற்குரிய மதிப்பை அளிக்க வேண்டும், அவர்கள் வெற்றியை பாராட்ட வேண்டும்.

இத்தகைய தொடர்கள் சவால் மிகுந்தவை என்று நான் ஏற்கெனவெ கூறியிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் அடுத்து வரும் போட்டிகள் ஏறக்குறைய காலிறுதிதான், இத்தகைய சோதனை வரவேற்கத்தக்கதுதான், அணிகளுக்கு இதனால் உத்வேகம் கூடுதலாகும்.

இவ்வாறு கூறினார் விராட்கோலி.

Related Posts