Ad Widget

இலங்கை அகதிகள் தரையிறங்க அனுமதித்தது இந்தோனேசியா!

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டி நிற்கும் படகில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகளை தரையிறங்குவதற்கு இந்தோனேசிய அரசு அனுமதி அளித்துள்ளது.

tamil-board-akathy

கடந்த ஒரு வார காலமாக ஆச்சே மாகாண கடற்கரையில் படகில் இருந்த அகதிகள் 44 பேரும் இன்று தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர்.

கர்ப்பிணிப் பெண், ஒன்பது சிறுவர்கள் மற்றும் பெண்கள் அடங்கிய 44 அகதிகள் விவகாரத்தை இந்தோனேசியா மனிதாபிமானற்ற வகையில் அணுகுகின்றது என்று அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கண்டித்திருந்தன.

அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் இந்தோனேசியாவின் தொண்டர் நிறுவனங்களும், இதுகுறித்து கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்ததுடன் மனிதாபிமான அடிப்படையில் அகதிகளை தரையிறங்க அனுமதிக்குமாறும் கோரியிருந்தன.

இந்நிலையில், படகில் உள்ள அகதிகளைத் தரையிறங்க அனுமதிக்குமாறு இந்தோனேசிய உதவி ஜனாதிபதி யூசுப் கல்லா, ஆச்சே மாகாண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை அடுத்தே, அகதிகள் கரையில் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

அகதிகளை ஒளிப்படம் எடுத்து அடையாளங்களை பதிவு செய்யும் பணிகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று அங்குள்ள ஏ.எவ்.பி. செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

பெண்கள், குழுந்தைகளை உள்ளடக்கிய அகதிகள் படகை மீண்டும் ஆழ்கடலுக்குள் கொண்டு சென்று விடுவதற்கு முன்னர் இந்தோனேசியா அரசு முடிவெடுத்திருந்தது,

இதற்கு அனைத்துலக அளவில் கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்த நிலையிலேயே அகதிகளைத் தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Posts