Ad Widget

இலங்கை அகதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்

தனது குடும்பத்தினருடன் தாம் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட வேண்டுமெனக் கோரி, குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, திருவண்ணாமலையில், தனியான முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள், உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

intia-tamil-akathikal

தானும் தனது குடும்பத்தினரும், கட்டப்பட்டுக்கொண்டிருந்த தமது வீட்டையும் கைவிட்டு, சிறந்த எதிர்காலம் மற்றும் நல்வாழ்வு கிடைக்குமென நம்பி, இந்தியாவிற்கு வந்ததாகவும் ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்னர், தாங்கள் இராமேஸ்வர கரைக்கு வந்து சேர்ந்த பின்னர், தமது எண்ணங்கள் தவறாக போயுள்ளதாக, தினகரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தெரிவித்துள்ளார்.

‘நான், எனது மனைவியையும், 13 வயது மகளையும் 7 வயது மகனையும் மே மாதம் 7 ஆம் திகதியன்றுதான் கடைசியாக பார்த்தேன். நான் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் எனது குடும்பம் எங்கே உள்ளதென எனக்கு தெரியாதுள்ளது.

எனது பிள்ளைகள் பாடசாலைக்கு போகின்றனரா அல்லது ஒரு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்றும் எனக்கு தெரியாது’ என தினகரன், இந்திய ஊடகமொன்றுக்கு கூறினார்.

இவரின் குடும்பத்தினருக்கு முல்லைத்தீவில் இந்திய வீடமைப்புத் திட்டத்தினால் இலவச வீடு ஒன்று கிடைத்துள்ளது. ஐ.நாவின் கவனத்தை ஈர்பதற்காக இவரும் வேறு 24 அகதிகளும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

‘இந்த முகாமில் உள்ள இன்னும் இரண்டு இலங்கை தமிழர்கள், தமது குடும்பங்கள் எங்கே உள்ளதென ஏதும் தெரியாத நிலையில் உள்ளனர்.

தாசில்தாருக்கு பல மனுக்கள் கொடுத்த போதிலும் ஒரு சொல் கூட பதிலாக வரவில்லை’ என வேறு ஒரு இலங்கைத் தமிழர் கூறினார்.

தாம் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் இந்த சட்டத்தில் குடும்பத்தினரை பிரிந்து தடுத்து வைக்கப்பட வேண்டுமென கூறப்படவில்லை என அங்கிருந்தோர் கூறினர்.

இந்த முகாமில் தாங்கள் 3 மாதங்களுக்கு அதிகமாக இருப்பதாகவும் ஆனால் பொலிஸார் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Related Posts