இலங்கையை வெள்ளையடிப்பு செய்து சாதனை வெற்றி படைத்தது இந்தியா

இலங்கைக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என வெற்றிபெற்று தொடரை வெள்ளையடிப்புச் வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது.

முன்னதாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என வெள்ளையடிப்புச்செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரையும் சொந்த மண்ணில் வைத்து வெள்ளையடிப்புச் செய்து இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஒரேயொரு இருபதுக்கு-20 போட்டியிலும் விளையாடி வருகின்றது.

டெஸ்ட் தொடரை 3-0 என வெள்ளையடிப்புச் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரையும் தற்போது வெள்ளையடிப்புச் செய்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெற்ற 5 ஆவது ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் திரிமன்னே 67 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 55 ஓட்டங்களையும் உபுல் தரங்க 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 42 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் 239 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் ஆட்டங்கண்ட போதிலும் அணித் தலைவர் கோலி உறுதியுடன் துடுப்பெடுத்தாடி 110 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இறுதியில் இந்திய அணி 46.3 ஓவர்களில் 21 பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகளால் 5 ஆவது ஒருநாள் போட்டியை வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி இலங்கையை அதன் சொந்த மண்ணில் வெள்ளையடிப்புச் செய்துள்ளது.

இத் தொடரின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா தெரிவுசெய்யப்பட்டார்.

தனது சொந்தமண்ணில் இலங்கையை வேறு நாட்டு அணியொன்று ஒருநாள் போட்டித் தொடரை வெள்ளையடிப்புச் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான ஒரேயொரு இருபதுக்கு-20 போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts