இலங்கையை வெள்ளையடித்து வரலாறு படைத்தது இந்தியா!!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 352 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில், இந்திய அணியால் போலோ-ஓன் முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டது.

தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இந்தியாவின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கை சார்பாக துடுப்பாட்டத்தில் டிக்வெல்ல 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இந்தியா சார்பாக அஸ்வின் 4 இலக்குகளையும் முகமட் சமி மூன்று இலக்குக்களையும் கைப்பற்றினார்கள் முன்னதாக இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

இந்தியாவின் ஆரம்ப வீரர்களான தவான்,லோகேஷ் ராகுல் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுக்க இறுதியில் ஹர்த்திக் பாண்டியா முழங்க இந்திய அணி அனைத்து இலக்குக்களையும் இழந்து 487 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தியா சார்பாக துடுப்பாட்டத்தில் தவான் 119 ஓட்டங்களையும் பாண்டியா 108 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை சார்பாக பந்துவீச்சில் புஷ்பகுமார 3 இலக்குக்களையும் சந்தகான் 5 இலக்குக்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலளித்த இலங்கை அணி 135 ஓட்டங்களுக்குள் சகல இலக்குக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் சந்திமால் 48 ஓட்டங்களையும் டிக்வெல்ல 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் குலதீப் ஜாதவ் 4 இலக்குகளை கைப்பற்ற அஸ்வின் மற்றும் சமி தலா 2 இலக்குக்களை கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி மூலம் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 8 வது டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளது,இலங்கை,தென் ஆபிரிக்க, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலிய, நியூசிலாந்து, பங்களாதேஷ், இங்கிலாந்து, இலங்கை அணிகளை தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் வோ தலைமையில் 9 டெஸ்ட் தொடர்களை வெற்றிகொண்டமையே உலக சாதனையாக காணப்படுகின்றது.

அத்தோடு 2004 ம் ஆண்டு இலங்கைக்கான சுற்றுலாவை மேற்கொண்ட பொண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இலங்கையை இலங்கை மண்ணில் வைத்து 3-0 என்று டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டதற்கு பின்னர், இந்திய இப்போது இலங்கை அணியை 3-0 என்று வெற்றிகொண்டுள்ளது.

22 ஆண்டுகளாக இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடர் எதனையும் வெற்றிகொள்ள முடியாத இந்திய அணி,விராட் கோஹ்லி தலைமையில் அடுத்தடுத்து இரு தொடர்களை வெற்றிகொண்டுள்ளது.

2015 இல் 2-1 என்றும் இப்போது 3-0 என்று இந்தியா தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியாவின் இன்றைய வெள்ளையடிப்பு சாதனை 8 வது தடவையாக அமைந்துள்ளது, வெளிநாடு ஒன்றுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணியை அதன் சொந்த மண்ணிலேயே வெள்ளியடிப்பு செய்தமையே அந்த சாதனையாகும்.

அந்த வரிசையில் விராட் கோஹ்லி தலைமையிலான அணிக்கு அந்த அறிய சாதனையை படைத்த முதல் ஆசிய அணி எனும் பெருமை கிட்டியுள்ளது.

தலைமைத்துவத்தில் விராட் கோஹ்லி தனது 29 வது டெஸ்ட்டில் 19 வது வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

இலங்கை மண்ணில் இந்தியா விளையாடிய இறுதி 5 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

Related Posts