இலங்கையை வீழ்த்தத் திட்டமிடும் முரளி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கைக்குமிடையிலான கிரிக்கெட் தொடரின் தயார்படுத்தல்களில், அவுஸ்திரேலிய அணி ஈடுபட்டுவரும் நிலையில், அவ்வணிக்கான சுழற்பந்துவீச்சு ஆலோசகராகச் செயற்பட்டுவரும் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், தனது பணியை நியாயப்படுத்தியுள்ளார்.

MURALI

இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் பலர், வெளிநாடுகளைச் சேர்ந்த அணிகளால் ஒப்பந்தம் செய்யப்படுவதொன்றும் புதிதன்று. குறிப்பாக, இலங்கை கிரிக்கெட் சபை மீது முன்னாள் வீரர்களுக்கு இன்னமும் காணப்படுவதாகக் கூறப்படும் எதிர்ப்பு அல்லது நம்பிக்கையின்மை காரணமாக, வெளிநாட்டு அணிகளோடு இணைந்து செயற்படுவதற்கு, அவ்வீரர்கள் விரும்புகின்றனர். இலங்கை கிரிக்கெட் சபையும், முன்னாள் வீரர்களை நாடுவதில்லை.

ஆனால், உலக இருபதுக்கு-20 தொடருக்கு முன்பாக, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல ஜெயவர்தன செயற்பட்டமை, இலங்கை கிரிக்கெட் சபை மட்டத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தான், இலங்கைக்கு வந்துள்ள அவுஸ்திரேலிய அணியோடு இணைந்து, முரளிதரன் பணியாற்றி வருகிறார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த முத்தையா முரளிதரன், “இலங்கைக்காக நான் இறுதியாக விளையாடியமை, 6 ஆண்டுகளுக்கு முன்னராகும். இலங்கை கிரிக்கெட்டோடு நான் இப்போது சம்பந்தப்பட்டிருக்கவில்லை. அங்கு ஏற்கெனவே சிலர் ஈடுபட்டுள்ளனர். ஆகவே விடயங்களை நான் குழப்ப விரும்பவில்லை” என்றார்.

ஏற்கெனவே சிலர் ஈடுபட்டுள்ளனர் என்ற அவரது கருத்து, முன்னாள் வீரர்கள், இலங்கை கிரிக்கெட்டோடு இணைந்து செயற்படுவதற்குத் தடையாக, சிலர் காணப்படுகின்றனர் என்ற உட்கருத்தைக் கொண்டுள்ளதாக என்பது, விவாதத்துக்குரியது.

ஐ.பி.எல் போட்டிகளிலும் பின்னர் இந்தியாவின் வங்காள கிரிக்கெட் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஆலோசகராகவும் பிரதானமாகப் பணியாற்றுவதாகக் குறிப்பிட்ட முரளி, இடையில் அவுஸ்திரேலியாவுடன் அவ்வப்போது பணியாற்றியதாகவும் குறிப்பிட்டார். தனது அறிவை, ஏனையோருடன் பகிரும் சந்தர்ப்பத்தைத் தவறவிட விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முரளி, “என்னுடைய பிரச்சினை என்னவெனில், முழு நேரமாக என்னால் பணியாற்ற முடியாது. அதற்கு நான் தயாராக இல்லை. அப்படியில்லாவிடில், இருபதுக்கு-20 போட்டிகளில் உலகம் முழுவதும் விளையாடிக் கொண்டிருந்திருப்பேன்” என்றார். தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட விரும்புவதன் காரணமாக, இவ்வாறான நிலை காணப்படுவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

டெஸ்ட் தொடர் தொடர்பாகக் கேட்கப்பட்ட போது, இலங்கையின் முக்கிய வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் ஓய்வுபெற்றுள்ள நிலையில், டெஸ்ட் தொடர் சம அளவில் காணப்படும் எனக் கூற முடியாதுள்ளதாகத் தெரிவித்த முரளி, ரங்கன ஹேரத்தே இலங்கையின் பிரதான ஆயுதம் எனவும், ஏனைய பந்துவீச்சாளர்களைச் சமாளித்தால், அவுஸ்திரேலிய அணிக்குச் சிறப்பான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts