தலை நகர் கொழும்பு உட்பட நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218 உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பலியானவர்களில் சுமார் 35 வெளிநாட்டவர்களும் உள்ளடங்கும் நிலையில், காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பின் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுவபிட்டி – புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகியவற்றிலும் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷங்ரில்லா, சினமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலிலும் காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையில் குண்டுத் தககுதல்கள் இடம்பெற்றன.
இந்த ஆறு சம்பவங்களும் தற்கொலை தாக்குதல்கள் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது. அத்துடனநேற்று பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதுடன் பின்னர் 2.30 மணியளவில், தெமட்டகொட பொலிஸ் பிரிவில் குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மூவர் தெமட்டகொட மஹவில பூங்கா பகுதி சொகுசு வீட்டில் இடம்பெற்ற குன்டுவெடிப்பில் உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந் நிலையில் இந்த 8 சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், அவ்வனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை செய்து சந்தேக நபர்களைக் கைது செய்யும் பொறுப்பு குற்றப் புலனயவுப் பிரிவின் (சி.ஐ.டி.) பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை வரை 13 பேர் கைது செய்யப்ப்ட்டிருந்தனர்.
அவர்களில் மூவர் தெமட்டகொடை வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். ஒருவர் வெடிபொருள் எடுத்து வந்த வேனின் சாரதியாவார்.
ஒவ்வொரு சம்பவங்கள் தொடர்பிலும் எத்தனை பேர் கொல்லப்பட்டரகள் என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியாத போதும், நேற்று மாலை வரை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை மையபப்டுத்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இது வரையிலான காலப்பகுதியில் 77 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு மேலும் 261 பேர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் 104 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தொடர்ந்தும் 100 பேர் வரையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேபோல் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் ( களுபோவில) இரு சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு மேலும் 6 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தெஹிவளை சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களாவர்.
மட்டக்களப்பு குண்டுவெடிப்பில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 51 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கொழும்பு வடக்கு போதன அவைத்தியசாலையில் ( ராகம) 7 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 32 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் கம்பஹ வைத்தியசாலையிலும் இருவர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள பிரேதங்களில் இன்று மாலையாகும் போது 35 வெளிநாட்டவர்களின் சடல்ங்கள் இருந்ததாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அவர்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், மொரோக்கோ, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளை சேர்ந்தவ்ர்கள் உள்ளடங்குவதாக அந்த அதிகாரி சுட்டிக்கடடினார்.