இலங்கையும் பஹரெயினும் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டன

இலங்கையும் பஹரெயினும் இரு நாடுகளுக்குமிடையில் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 4 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் நேற்று கையொப்பமிட்டன. 3 உடன்படிக்கைகளில் விளையாட்டு, கலாசாரம், கலை ஆகிய துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மற்றது கொழும்பு பல்கலைக்கழகத்துக்கும் பஹரெயின் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான உடன்படிக்கையாகும்.

Sri Lanka and Bahrain

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பஹரெயின் சென்றுள்ள சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அல் – சபிர் மாளிகையில் பஹரெயினின் ஹமாத் பின் இசா அல் – கலிபா மன்னர், பிரதம அமைச்சர் கலிபா பின் சல்மான் பின் ஹமாத் அல் கலிபா இளவரசர், பஹரெயினின் ஏனைய உயர் அதிகாரிகள் ஆகியோர் அமோகமாகவும் கோலாகலமாகவும் வரவேற்றனர்.

இலங்கை சனாதிபதி ஒருவர் பஹரெயினுக்கு மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம் இதுவாகும் எனக்
குறிப்பிட்ட சனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளின்
நல்லுறவையும் முதிர்ச்சியையும் இது குறிக்கிறது எனக் குறிப்பிட்டார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்களை கவனத்தில்
எடுத்துக்கொண்ட இரு தலைவர்களும் சர்வதேச மேடைகளில் பரஸ்பர ஒத்துழைப்புடன்
செயல்படுவதற்கு உடன்பட்டார்கள்.

இலங்கை சனாதிபதி அவர்களின் தலைமைத்துவம் நேர்மை திறன்மிக்கதொன்றாகும். அவர் பிராந்திய
ஸ்திரத்தன்மைக்காக உன்னத சேவைகளை ஆற்றுகின்றார். என ஹமாத் மன்னர் தனது தூதுக்
குழுவின் உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்.

இலங்கைக்கும் பஹரெயின் இராச்சியத்துக்குமிடையில் உத்தியோகபூர்வ இராஜதந்திர தொடர்புகள்
1992ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் மனாமா தலை நகரில் புதிய
இலங்கை தூதரக அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல்
பொருளாதார தொடர்புகள் சக்திமிக்கதாக இருக்கின்றது. 2009ஆம் ஆண்டில் இரண்டு நாள்
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த அந்நாட்டு பிரதம அமைச்சர்
வடக்கில் மீள் நிர்மாண கருத்திட்டங்களுக்கு ஒரு மில்லியன் டொலர் நன்கொடையாக வழங்கினார்.
பொருளாதார தரப்பை எடுத்துக்கொள்ளும்போது 2003ஆம் ஆண்டில் 7.3 மில்லியன் டொலராக இருந்த
இலங்கை – பஹரெயின் வர்த்தக கொடுக்கல் வாங்கல் பெறுமதி 2013ஆம் ஆண்டில் 34.9 மில்லியன்
டொலராக அதிகரித்தது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கைத்தொழில், வாணிப அமைச்சர், ரிசாட்
பதியுதீன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு. நலனோம்புகை அமைச்சர் டிலான் பெரேரா,
தொழில், தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர, மேல் மாகாண சபை உறுப்பினர்,
நௌசர் பௌசி, சனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பஹரெயினுக்கான இலங்கை தூதுவர்
அநுர எம்.ராஜகருணா ஆகியோருடன் வியாபார தூதுக் குழுவின் அங்கத்தினர்கள் பலர் இருதரப்பு
பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.

Related Posts