உலக உணவுத்திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 66 சதவீதமானோர் நாளாந்தம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதன் விளைவாகப் பல்வேறு சமூகப்பிரச்சினைகள் தோற்றம்பெற்றுள்ளன.
அந்தவகையில் உணவுப்பாதுகாப்புத் தொடர்பில் உலக உணவுத்திட்டமும் இலங்கை அரசாங்கமும் ஒன்றிணைந்து கடந்த ஏப்ரல் மாதம் தொடர்ச்சியான ஆய்வினை முன்னெடுத்திருந்தன.
அந்தவகையில் நாட்டிலுள்ள 17 மாவட்டங்களில் வசிக்கும் மிகவும் வறிய குடும்பங்களை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் மூலம் குறைந்த விலையுடைய பொருட்களைக் கொள்வனவு செய்தல், குறைந்த போசணையுடைய உணவை உட்கொள்ளல் , வரையறுக்கப்பட்டளவிலான உணவை உட்கொள்ளல் , நாளாந்தம் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்தல் ஆகிய மாற்றுவழிகளை அக்குடும்பங்கள் கையாள்வது கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த மக்களின் வாழ்வாதாரம், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக மேலும் மோசமடைந்துள்ளது. உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துச்செல்வதன் காரணமாக இலங்கையின் உணவுப்பணவீக்கம் 57 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் உணவுப்பற்றாக்குறைக்கு வழிவகுத்திருக்கும் பல்பரிமாண பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை மேலும் சில அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்து மனிதாபிமானத்தேவைகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்த கூட்டிணைந்த செயற்திட்டமொன்றைத் தயாரித்திருப்பதுடன், அதனூடாக சுமார் 1.7 மில்லியன் மக்களுக்கு அவசியமான உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்கு 47.2 மல்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.