இலங்கையில் 300 ரூபாவாக அதிகரிக்கும் பாணின் விலை!! யாழில் 15 நாட்களில் வெதுப்பகங்களை மூடும் நிலை!!

எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், டொலர் நெருக்கடி காரணமாக கோதுமை மா இறக்குமதியை நிறுவனங்கள் கட்டுப்படுத்தியிருந்தன.

இதன் காரணமாக 50 கிலோகிராம் எடை கொண்ட கோதுமை மா மூட்டை ஒன்றின் விலை தற்போது இருபதாயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக பல பேக்கரிகள் மூடப்படும் அபாயம் உள்ளது.

எனவே எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என்பதுடன், பணிஸ் ஒன்றின் விலையை 30 ரூபா அளவிலும் அதிகரிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் பாணின் விலையை கட்டுப்படுத்த முடியாதநிலை ஏற்படும், கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்தினராலும் விலையேற்றத்தினை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் என யாழ். மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்களின் நிலைமை தொடர்பில் நேற்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கோதுமை மாவின் விலை தற்போது அதிகரித்துவிட்டது. மாவிற்கான நிர்ணய விலையில்லை. விலைநிர்ணயம் இல்லாத காரணத்தினால் விரும்பியவாறு மாவின் விலை ஏற்றப்படுகின்றது. எனவே பாணின் விலையும் அதிகரித்து கொண்டிருக்கின்றது.

இன்று வரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள மூடப்பட்டுள்ளன. கோதுமை மா இல்லை என்பதுடன் அதன் விலையும் அதிகரித்துவிட்டது. அதனால் தற்பொழுது நாங்கள் மாவினை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பில் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றோம்.

கோதுமை மா விலை பற்றி நுகர்வோர் பாவனையாளர் அதிகார சபையினர் கதைக்கவில்லை. ஆனால் முட்டை விலை பற்றி மாத்திரம் கதைத்து கொண்டிருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோகிராம் மா 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இனி எதிர்வரும் நாட்களில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் பாணின் விலையை கட்டுப்படுத்த முடியாதநிலை ஏற்படும். கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்தினராலும் விலையேற்றத்தினை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் எதிர்வரும் நாட்களில் பாணின் விலை அதிகரிக்கும்.

சில வெதுப்பக உரிமையாளர்கள் பாணின் விலையை அதிகரிக்காவிட்டாலும் நிறையினை குறைப்பார்கள். இதன் காரணமாக முரண்பாடான நிலை ஏற்படும். எனவே பாணின் உற்பத்தியை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக அரிசி மாவினை பாணுடன் கலந்து செய்வதற்கான உத்தியை கையாண்டு கொண்டிருக்கின்றோம்.

அது வெற்றியளிக்கும் பட்சத்தில் அரிசிமாவினை கலந்து பாண் உற்பத்திசெய்வதன் மூலம் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு பாண் வழங்க முடியும். வெதுப்பக உற்பத்திகளின் சகல மூலப் பொருட்களும் விலையேறியுள்ளன. அதன் காரணமாகவே பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளன.

எந்த கடையிலும் கோதுமை மா இல்லை. பிறீமா நிறுவனம் நமக்கு வழங்கிய மாவின் அளவினை தற்பொழுது குறைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்னும் 15 நாட்களில் சகல வெதுப்பகங்களினையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டும்.

ஆனால் தற்பொழுது இந்தியாவில் வழங்கப்பட்ட மா மூலம் யாழ்ப்பாணத்தில் வெதுப்பக உற்பத்தி தக்கவைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலை தொடருமாக இருந்தால் வரும் நாட்களில் வெதுப்பகத்தினை மூட வேண்டிய நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts