இலங்கையில் 15 மணிநேர மின்வெட்டு!

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நீர் மின் உற்பத்தி நிலையங்களில் உரிய முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படாவிட்டால் இந்த நிலை உருவாகும்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி திருத்தப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.

இதனால் 270 மெகாவோட் மின்சார உற்பத்தி தடைப்பட்டுள்ளது. எரிபொருள் பிரச்சினையால் மேலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

உரிய முகாமைத்துவம் இன்றி நீர் மின் உற்பத்தி செய்தால், நீர் மட்டம் குறைந்து தற்பொழுது உற்பத்தி செய்யும் அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போகும்.

மின்சார உற்பத்தி தொடர்பில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. இந்த நிலையில் அனைத்து தரப்பினரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தாமை பாரிய சிக்கல்களை உருவாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts