இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை காணப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் வவுனியா மாவட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
‘தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் இந்த விளையாட்டுக்களில் இளைஞர்கள் இன மத பேதமின்றி பயணித்து தேசிய ரீதியில் மிளிர்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களிற்கு இருக்கின்றது.
இன்று வடக்கு கிழக்கிலே இருக்கின்ற இளைஞர் யுவதிகளை பார்க்கின்ற போது அதிகளவாக போதைப்பொருளிற்கு அடிமையானவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.
இந்த நாட்டிலேயே போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற மாகாணமாக வடமாகாணம் திகழ்கின்றது.
கடந்த காலத்திலே ஆட்சி செய்த ஆட்சியாளர்களிற்கு மத்தியிலே இப்பொழுது இலங்கையை ஆட்சி செய்கின்ற நல்லாட்சி அரசாங்கம் போதையற்ற நாடாக மாற்றுவோம் என சபதமெடுத்திருந்தனர்.
எனினும், இவர்களது ஆட்சியில்தான் இன்று இலங்கையிலே குறிப்பாக வடமாகாணத்தில் அதிகளவான பேதைப்பொருள் பாவனையில் இருக்கின்றது.
இந்த போதைப்பொருள் பாவனையால் இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
எத்தனையோ அழிவுகளை தடுத்த இந்த அரசாங்கத்தால் இந்த போதைப்பொருளை மாத்திரம் தடுக்க முடியவில்லை. இதன் காரணமாக எங்களது இளைஞர், யுவதிகள் தங்களது எதிர்காலத்தை சிதைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
எனவே போதையற்ற மாகாணமாக இந்த வடமாகாணத்தை மாற்ற இளைஞர்கள், மக்கள் பிரதிநிதிகள், தேசிய இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.