இலங்கையின் தேவை கருதி, உள்நாட்டு விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டுவரும் செய்மதியை விண்வெளிக்கு அனுப்புவதற்கு 400 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இத்தொகைப் பெற்றுத்தருமாறு திறைசேரியிடம் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு கோரியுள்ளது.
இலங்கையில் விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஆதர் சி.கிளார்க் நிறுவனத்தினூடாக உள்ளூர் விஞ்ஞானிகளால் செய்மதியொன்றை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
சிறியதொரு செய்மதியை விண்வெளிக்கு அனுப்பி, அதன்மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக்கொள்ள உள்ளூர் விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
‘நெனோ செடலைட்’ என்று இந்த சிறிய செய்மதி அழைக்கப்படுகிறது. இது இலங்கை விஞ்ஞானிகளின் முழுமையான திறனினால் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும், இதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ரொக்கெட்டுக்காக இந்தியா அல்லது சீனாவின் உதவியை நாட வேண்டி ஏற்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.