இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ரூ. 87.29 கோடி செலவில், 200 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை இந்திய அரசு கட்டிக் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வவுனியா, அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிப்பவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோக்கத்தில் அதன் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படுகிறது.
அடுத்ததாக, அந்த மருத்துவமனைக்கு ரூ. 4.7 கோடி செலவில் மருத்துவ உபகரணங்கள், மேஜை, நாற்காலி ஆகியவற்றை இந்திய அரசு வழங்கவுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.28.2 கோடி செலவில் சிவில், இயந்திரவியல் ஆகிய பிரிவுகளும், விவசாயத் துறையினருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையமும் அமைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, யாழ்ப்பாணத்தில் ஆங்கில மொழி ஆய்வு மையத்தையும், அந்நகரில் உள்ள பொது நூலகத்தில் இந்திய மையத்தையும் இந்தியத் தூதர் ஒய்.கே.சின்ஹா திறந்து வைத்தார்.