சிறீலங்கா முழுவதும் போலியோ நோய்த் தடுப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கையை மேற்கொண்ட தினமான தேசிய நோய்த் தடுப்புத் தினமன்று, நீங்கள் ஆயுதங்களை கீழே வைக்கத் தயாரானால் நாமும் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்துவதற்கு தயார் என விடுதலைப்புலிகள் கடிதம் மூலமாக அறிவித்திருந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவின் தலைநகர் சியோலில் நடைபெற்ற றோட்டரிக் கிளப் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் போலியோ நோய் அச்சுறுத்தல் இல்லை. அத்துடன் இரண்டு தசாப்த காலத்துக்கும் அதிகமான காலங்கள் எமது நாட்டில் போலியோவுக்கான எந்தவொரு அறிகுறியும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
ஆயுதப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியிலேயும் போலியோ நோயை இல்லாது ஒழித்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.
றோட்டரிக் கழகத்தின் ஆதரவுடனேயே போலியோ நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தோம் எனவும் அதன் தலைவர் ரவீந்திரனிடமிருந்து அதிகளவான அனுசரணைகள் கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.