இலங்கையில் ராஜபக்சே அரசு போய், அவருடைய முன்னாள் நண்பர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில் புதிய அரசு அமையவுள்ளது.
இந்த தேர்தல் முடிவு, இந்தியாவுக்கு எந்த அளவுக்கு முக்கியமானது, எந்த அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும்? உண்மையில் இந்தத் தேர்தல் முடிவுகள் இந்தியாவுக்கு மிக மிக முக்கியமானது. ராஜபக்சேவின் வீழ்ச்சியை தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் கொண்டாடி வருகின்றன.
வரும் ஆண்டுகளில் என்னவெல்லாம் நாம் எதிர்பார்க்கலாம் என்பது குறித்து பார்வை இது.
தமிழர் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வு என்பது மிக முக்கியமான கவலையாகும். அதேபோல இந்தியாவின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகும் அடங்கியுள்ளன. சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் வரவு ஒரு முக்கியக் கவலை.இலங்கையிலிருந்து கடத்தல் அதிகரித்து வருவது இன்னொரு கவலை.பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, தென்னிந்தியாவைக் குறி வைக்க இலங்கையை களமாக பயன்படுத்த ஆரம்பித்திருப்பது மிக லேட்டஸ்டான கவலையாகும்.
தமிழர் பகுதிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கையாகும். இதுகுறித்து இதுவரை இலங்கை கவலைப்பட்டதில்லை. இந்தியாவும் தொடர்ந்து கூறியபடிதான் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் தமிழர்களின் பகுதிகளுக்கும் கூடுதல் அதிகாரம் கிடைக்கும். ஆனால் இதை ராஜபக்சே செய்யவில்லை. அளித்த வாக்குறுதியையும் காப்பாற்றவில்லை. புதிய அரசாவது தமிழர் பிரச்சினையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆக்கப்பூர்வமாக செயல்படுமா என்ற எதிர்பார்ப்பில் இந்தியா உள்ளது.
தமிழர் பிரச்சினையில் சமமான நிலைப்பாட்டை புதிய அரசு எடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்தியா உள்ளது. அண்டை நாடு என்ற வகையில் இந்தியாவுக்கு முக்கியமானது இலங்கை. தமிழர் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டால்தான் இலங்கையுடனான உறவு முழுமை பெற முடியும்.
எனவே தமிழர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண புதிய அரசுடன் இணைந்து இந்தியா தொடர்ந்து செயல்படும். அதேசமயம், இலங்கையுடனான உறவையும் இந்தியா வலுப்படுத்தவே முனையும்.
இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான நெருக்கமான உறவு இந்தியாவைத் தொடர்ந்து கவலைப்படுத்தி வருகிறது. இதை பலமுறை இந்தியா இலங்கையிடம் கூறியுள்ளது.
சீனா, தனது அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை இலங்கையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது, இந்தியாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கையில் நிறுத்தப்பட்டிருப்பதை தனது பாதுகாப்புக்கு விடப்படும் சவாலாக இந்தியா பார்க்கிறது. மிரட்டலாக பார்க்கிறது.
மேலும் தென்னந்திய கடல் மார்க்கமாக சீன ஆயுதங்கள் கடத்தப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் வரும் வகையில் இலங்கை நடக்காது என்று அந்த நாட்டு அரசு கடந்த காலங்களில் தொடர்ந்து உறுதியளித்து வந்துள்ளது. புதிய அரசும் அதேபோலவே நடக்கும் என்றே தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐ உளவாளி சென்னையில் பிடிபட்டது இந்தியாவுக்கு புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான தனது செயல்பாடுகளுக்கு இலங்கையை களமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது ஐஎஸ்ஐ என்பது இதன் மூலம் உறுதியானது. கைது செய்யப்பட்ட ஜாகிர் உசேன், கொழும்பில் உள்ள இலங்கை தூதரகம்தான் ஐஎஸ்ஐயின் களமாக இருப்பதாக கூறியது இன்னும் கவலையை அதிகரித்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபேர் சித்திக்கிதான் இந்த வேலைகளை தலைமையேற்று செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து இந்தியா பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை வட இந்தியா மற்றும் மத்திய பகுதிகளை மட்டுமே குறி வைத்து வந்த ஐஎஸ்ஐ தற்போது தென்னிந்தியாவை வேகமாக நெருங்கி வருவதாகவே இந்தியா கருதுகிறது.
எனவே புதிய அரசுடன் தமிழர் பிரச்சினை மட்டுமல்லாமல் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாகவும் நெருங்கிச் செயல்பட வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது.