இலங்கையில் நீதியைத் தேடி : ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்த உடல்கள்… கதறிய நெஞ்சங்கள்…

கொத்து கொத்தாய் குண்டுகள் வீசி கொல்லப்பட்ட தமிழர்கள்… குழந்தைகளும், பெண்களும் ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து மடிந்ததை காண்பவர்களின் கண்களில் மட்டுமல்ல நெஞ்சங்களிலும் ரத்தத்தை வரவழைக்கும் ஆவணபபடம்தான் ‘இலங்கை – நீதியைத் தேடி’.

vanni-fight-dead-girl-mulliththevu-1

இலங்கை இறுதிப்போரில் திட்டமிட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்தியிருக்கிறது “இலங்கை-நீதியைத் தேடி” என்ற ஆவணப்படம்.

போர் இறுதிக்காலங்களில் பணியாற்றிய ஐ.நா. அதிகாரிகள் நெஞ்சம் பதைபதைக்கும் வகையில் இந்த ஆவணப்படத்தில் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட போரின் போது,அப்பாவித் தமிழ் மக்கள் மீது இலங்கை ராணுவத்தால் மேற்கொள்ளப்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பான இறுதிக் கட்ட அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆவணப்பட இயக்குனர் கலம் மெக்ரே இலங்கையில் இறுதிக்கட்டப்போரில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களை‘நோ ஃபையர் ஜோன்’ என்ற பெயரில் ஆவணப்படுத்தியிருந்தார்.

தற்போது “இலங்கை-நீதியைத் தேடி” என்ற பெயரில் மற்றுமொரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆவணப்படத்தில் இறுதிக்காலங்களில் பணியாற்றிய ஐ.நா. அதிகாரிகளின் பேட்டிகள் இடம்பெற்றுள்ளன. அந்த பேட்டியில் பெஞ்சமின் டிக்ஸ் என்ற ஐ.நா. அதிகாரி, ”அந்த அப்பாவி தமிழ் மக்கள் எந்த ஐ.நா. அமைப்பை நம்பியிருந்தார்களோ அந்த அமைப்பே ஐ.நா. அதிகாரிகளை வெளியேறச் சொன்னது” என்று ஐ.நா. அமைப்பின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இதேபோல் பேட்டியளித்துள்ள கார்டன் வைஸ் என்ற ஐ.நா. முன்னாள் செய்தித்தொடர்பாளர், ”இறுதிப்போரின்போது சாட்சியங்களே இல்லாமல் தமிழ் மக்களைக் கொன்று குவிப்பதே இலங்கை அரசின் திட்டமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரின்போது எத்தனை ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது எவருக்குமே தெரியாது என்று கூறியுள்ள கலம் மெக்ரே, சமீபத்திய தகவலின்படி குறைந்தது 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.

vanni-fight-dead-girl-mulliththevu-2

பிடிபட்டவர்களைக் கொன்று அவர்களது உடல்களை எரித்துவிட்டதால் சரியான எண்ணிக்கை தெரியாமல் இலங்கை ராணுவம் பார்த்துக் கொண்டுள்ளது என்றும் ஆவணப்படம் தெரிவிக்கிறது.

கலம் மெக்ரெயினால் வெளியிடப்பட்ட ஆவணப்படங்கள் பார்ப்பவர் நெஞ்சை கலங்கடிக்கும் விதத்தில் அமைந்திருந்தது.

அப்பாவித் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இன அழிப்பை மேற்கொண்ட சிங்கள அரசு, உலக நாடுகளின் ஆதரவுடன் தன் பக்க நியாயத்தை நிலை நாட்டுவதிலேயே குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்,அப்பாவித் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என களமிறங்கிய அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தது, அதில்,இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை தேவை என குறிப்பிட்டிருந்தது.

தமிழர்களைக் கைகளைக் கட்டி வைத்துவிட்டு இலங்கை ராணுவ வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு குருவிகளைச் சுடுவது போல சுட்டு ரசிப்பது போன்றவை ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்டது, இசைப்பிரியா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிக் கொல்லப்பட்டது என இந்த ஆவணப்படத்தில் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச விசாரணை மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழகர்களுக்கு நீதியை அளிக்க முடியும் என்றும் ஆவணப்படம் வலியுறுத்துகிறது.

Related Posts